2022 ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் கொரோனா அச்சம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சீனாவில் தீயாய் பரவும் கொரோனா தொற்று உலக நாடுகளையும் பீதியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் குளிர் வாட்டி வதைக்கிறது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
டிசம்பர் 1 , 2022 -அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
டிசம்பர் 6, 2022 - இந்தோனேசியாவில் திருமண உறவை தாண்டிய உடலுறவு மற்றும் லிவ் இன் உறவுகளை சட்டவிரோதமாக அறிவித்தது அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
டிசம்பர் 7, 2022 - லாக்டவுனுக்கு எதிராக மக்கள் போராட்டத்திற்கு இணங்கி சீனா அரசு தனது ஜீரோ கோவிட் கொள்கையை முடிவுக்கு கொண்டுவந்தது. அனைத்து நகரங்களிலும் லாக்டவுன் கட்டுப்பாட்டை நீக்கியது.
டிசம்பர் 10, 2022 - பிரான்ஸ் நாட்டில் 18 முதல் 25 வயது கொண்ட இளைஞர்களுக்கு மருந்து கடைகளில் ஆணுறை இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. 25 வயதுக்கு குறைவான பெண்களின் கருத்தரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதிபர் மேக்ரான் கூறினார்.
டிசம்பர் 13, 2022 - நியூசிலாந்தை சிகரெட் புகை இல்லாத தலைமுறையை உருவாக்க அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியது. அதன்படி, 2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் எவருக்கும் சிகரெட், புகையிலை விற்கக் கூடாது என்ற தடை உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்தது.
டிசம்பர் 14, 2022 - பெரு நாட்டில் பெரும் உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. அதிபர் பதவியில் இருந்து பெட்ரோ கேஸ்டிலோ நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அங்கு ஒரு மாதம் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.
டிசம்பர் 17, 2022- சீனாவில் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்ட நிலையில், அங்கு கட்டுக்கடங்காமல் நோய் தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. மருத்துவமனைகள், மயானங்கள் ஆகியவற்றில் நெரிசலுடன் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: நினைவுகள் 2022 - பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவு.. புதினுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு.. செப்டம்பர் மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ
டிசம்பர் 19, 2022 - உணவுப் பிரியர்கள் பலருக்கும் பிடித்தமான சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்த அலி அஹ்மத் அஸ்லாம் தனது 77ஆவது வயதில் காலமானார்.
டிசம்பர் 21, 2022 - ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி கற்க தடை விதித்து உயர்கல்வித்துறை அமைச்சர் நெடா முகமது நதீம் உத்தரவிட்டார்.
டிசம்பர் 22, 2022 - உலகையே உலுக்கிய படுகொலைகளை செய்த சர்வதேச கிரிமினல் சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
டிசம்பர் 26, 2022 - அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல் வீசியது. எலும்பை உறைய வைக்கும் குளிரை சமாளிக்க முடியாமல் 30க்கும் மேற்பட்டோர் பலி. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, CoronaVirus, International, Joe biden, YearEnder 2022