Xகம்யூனிஸ்ட் சைனீஸ் மிலிட்டரி கம்பெனி என்று தங்கள் நிறுவனத்தை பட்டியலிட்டதற்காக சீனாவின் முன்னணி ஷியோமி நிறுவனம் அமெரிக்க ராணுவ அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகத்தின் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் ஷியோமி வழக்கு தொடர்ந்துள்ளது. முன்னதாக 8 சீன நிறுவனங்களை அமெரிக்கா, சீன ராணுவத்துடன் தொடர்புடையது என்று கரும்பட்டியலில் இணைத்தது.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரச் சட்டம் பிரிவு 1237-ன் படி இந்த 9 நிறுவனங்களையும் தடை செய்ய உரிமை இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த கடைசி காலக்கட்டங்களில் மேற்கொண்ட பல உத்தரவுகளில் இதுவும் ஒன்று. இப்போது அது திரும்பித் தாக்குகிறது.
தங்கள் நிறுவனத்தை கரும்பட்டியலில் இணைத்தது தவறானது என்றும் இதனால் சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க முடியாதவாறு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு செய்துள்ளதாக ஷியோமி நிறுவனம் புகாரில் தெரிவித்துள்ளது.
கரும்பட்டியலில் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் அமெரிக்க முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடுகளை நவம்பர் 2021க்குள் திரும்பப் பெற வேண்டும்.
ஏற்கெனவே ஸ்மார்ட் போன் தயாரிப்பு ஜெயண்ட் நிறுவனமான ஹூவேய், சிப் தயாரிப்பு நிறுவனமான ஸ்மிக் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வணிக மற்றும் சமூகப் பயன்பாட்டுகளுக்கான பொருட்களையே தாங்கள் தயாரிப்பதாகவும், தங்களை சீன ராணுவ நிறுவனமாக பட்டியலிட்டதால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் ஷியோமி குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது போன்ற எத்தனையோ டிரம்ப் நிர்வாகக் குளறுபடிகளை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.