சீன அதிபர் ஜி ஜின்பிங் மூளை பிரச்சனை காரணமாக அவதிபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருட இறுதியில் இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. cerebral aneurysm எனப்படும் மூளை பிரச்னையால் அவர் தவித்து வருகிறார். மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் இயல்பான அளவை விட மெல்லியதாக சுருங்குவதே இந்த நோயின் தன்மையாகும். அவர், அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பவில்லை எனவும், பாரம்பரிய சீன மருத்துவத்தை அவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் கோவிட் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட பின் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் வரை ஜி ஜின்பிங் பொது நிகழ்வுகளில் ஏதும் கலந்துகொள்வதில்லை. அத்துடன் 2020ஆம் ஆண்டு ஷென்சான் பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்வில் பேசுகையில், ஜி ஜின்பிங் பேச்சில் முன்பிருந்த வேகம் குறைவாகவும், அடிக்கடி இருமலில் இருந்தது அவரது உடல் நலக்குறைவை உணர்த்துவதாக சந்தேகத்தை கிளப்பியது.
68 வயதான ஜி ஜின்பிங், வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் மூன்றாவது முறை தொடர்ந்து அதிபராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் முன்னாள் அதிபர் மாவோக்கு பின் சக்திவாய்ந்த அதிபராக ஜி உள்ள நிலையில், அவர் உடல் நிலை குறித்து எழுந்துள்ள விவாதம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. அத்துடன் சீனாவில் புதிதாக கோவிட் அலை ஏற்பட்டு, கடந்த மாதம் முழுவதும் ஷாங்காய் மாகாணம் பெரும் முடக்கம் கண்டது. அதேபோல், தலைநகர் பெய்ஜிங்கில் பாதிப்புகள் உயர்ந்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:
அலுவலத்திற்கு வந்து வேலை பார்க்க சொன்ன ஆப்பிள் நிறுவனம் - ஆத்திரத்தில் முன்னணி ஊழியர் ராஜினாமா
இந்த சூழலால் சீனா பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அத்துடன் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை சந்தையில் உயர்ந்துள்ளதும் அந்நாட்டிற்கு கூடுதல் நெருக்கடியை தந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.