காஷ்மீர் பிரச்னையில் மோடி விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார் - டிரம்ப் விருப்பம்... இந்தியா நிராகரிப்பு...

Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 11:35 PM IST
காஷ்மீர் பிரச்னையில் மோடி விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார் - டிரம்ப் விருப்பம்... இந்தியா நிராகரிப்பு...
ஜி20
Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 11:35 PM IST
காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மோடி விரும்பினால் தலையிட தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அதிபர் டிரம்ப் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது டிரம்ப் இத்தகவலை வெளியிட்டார்.

இதற்கு இந்தியாவில் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையேயானது எனக் கூறி அமெரிக்கா பின்வாங்கியது.

இந்த நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பிடம், காஷ்மீர் பிரச்னை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருப்பதாக கூறிய அவர், மோடி, இம்ரான்கான் ஆகிய இருநாட்டு பிரதமர்களும் சிறந்த மனிதர்கள் என்றும் இருவரும் இந்த விவகாரத்தை சரியாக அணுகுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இருவருமே விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட தயாராக இருப்பதாக கூறிய டிரம்ப், இந்த விருப்பத்தை ஏற்பது மோடியிடம்தான் உள்ளதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்று வரும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிற்கு இடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

அப்போது, காஷ்மீர் பிரச்னை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான விவகாரம் என்பதால், அதுகுறித்து பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இதனை ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...