டிவிட்டரை வாங்க 5 ஆண்டுகளாக கனவு கண்ட எலான் மஸ்க், தற்போது அதை நனவாக்கியுள்ளார். இந்த நிலையில், அவர் இதுவரை கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
தென் ஆப்பிரிக்காவில் 1971ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தவர் எலான் மஸ்க், சிறுவயதாக இருந்தபோதே, அம்மா பிரிந்து சென்றுவிட்டதால், அப்பாவின் அரவணைப்பில் வாழ்ந்தவர்.
கம்ப்யூட்டரில் வித்தை காட்டிய எலான் மஸ்க், பிலாஸ்டர் டூ பிசி என்ற வீடியோ கேமை வடிவமைத்து 500 டாலருக்கு விற்றபோது அவருக்கு வயது வெறும் 12 தான்.
தென் ஆப்பிரிக்காவில் பள்ளிப் படிப்பை முடித்து, கனடாவில் கல்லூரி வாழ்க்கையைக் கடந்த எலான் மஸ்க், அமெரிக்காவில் அடியெடுத்து வைத்தது 1994ல். தனது சகோதரர் கிம்பல் மற்றும் கிரேக் ஆகியோருடன் இணைந்து 1995ஆம் ஆண்டு அவர் தொடங்கியது ZIP2 என்ற ரூட் மேப் காட்டும் நிறுவனம்.
அபரிமிதமான வளர்ச்சியடைந்த அந்த நிறுவனத்தை 22 மில்லியன் டாலருக்கு விற்ற எலான் மஸ்க், அடுத்து கையில் எடுத்த தொழில் X.காம் என்ற ஈஸி பேமெண்ட் இணையதளம்.
10 மில்லியன் டாலரில் தொடங்கி, அதிலும் வெற்றிக்கொடி கட்டிய எலான் மஸ்க் முன்பு கொட்டத் தொடங்கியது பணமழை. 5-6 ஆண்டுகளிலேயே அசுர வளர்ச்சி கண்ட எலான் மஸ்க், மலிவு விலை ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கு, 100 மில்லியன் டாலர்களுடன் 2002ல் தொடங்கியதுதான் ஸ்பேஸ் எக்ஸ்.
இதையும் படிங்க: பொருளாதார தடை விதித்த ரஷ்யாவிடம் இருந்தே எரிபொருள் இறக்குமதி - பலே நேட்டோ நாடுகள்
2004ஆம் ஆண்டு வாக்கில் மின்சார கார் தயாரிப்பில் தீவிரம் காட்டிய டெஸ்லா நிறுவனத்தை கையகப்படுத்திய அவர், சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் சோலார் சிட்டி நிறுவனத்தையும் தொடங்கினார் எலான் மஸ்க்.
டெஸ்லாவின் ஆரம்ப கால கார்கள் அவரது முயற்சிக்கு ஸ்டார்டிங் ட்ரபிள் கொடுத்தாலும், அதன்பிறகு பிக்கப் ஆகி, ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது அவரது சொத்து மதிப்பு.
அதோடு நின்றுவிடவில்லை அவரது பிசினஸ் தாகம், மனித மூளையை, செயற்கை நுண்ணறிவுடன் அதாவது ரோபோட்களுடன் இணைக்கும் நியூராலிக் என்ற நிறுவனத்தை 2016ல் நிறுவி, அறிவியலில் அடுத்த கட்டத்திற்கு தாவிய அவர், அதே ஆண்டில், குகைகளை கட்டமைக்கும் தி போரிங் என்ற கட்டுமான கம்பெனியையும் தொடங்கினார் எலான் மஸ்க்.
2017ஆம் ஆண்டே டிவிட்டர் தனக்கு மிகவும் பிடித்த சமூகவலைதளம் என்று பதிவிட, இதை நீங்கள் வாங்கலாமே என எலான் மஸ்க்-கின் ஆசை தீயை பற்ற வைத்துள்ளார் பத்திரிகையாளர் ஒருவர்...
உடனே, கவுண்டமணி ரேஞ்சுக்கு, அப்போதே ட்விட்டர் நிறுவனத்தின் விலையை விசாரித்தவர் இந்த எலான் மஸ்க்.
டிவிட்டரை அப்போது வாங்க முடிவு செய்து, இப்போது அதை முடித்துக் காட்டியுள்ளார் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்.
- பெரிய பத்மநாபன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.