ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் சர்வதேச அளவில் குவியும் வாழ்த்துக்கள்..

கமலா-ஜோ பிடன்

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கும் உலக அளவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

 • Share this:
  அமெரிக்காவில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல் வாழ்த்தாக ஜோ பைடனுக்கும், துணை அதிபராகவிருக்கும் கமலா ஹாரிஸுக்கும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

  இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

  அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், துணை அதிபராக இருந்த போது, இந்திய - அமெரிக்க உறவில் ஜோ பைடனின் ஒத்துழைப்பு மிக சிறப்பாக இருந்தது என்றும், தற்போது அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம், இந்திய - அமெரிக்க உறவு புதிய உச்சத்துக்கு செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். துணை அதிபராக வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரீசுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

  இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பைடன் மற்றும் ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பைடனின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா ஒருங்கிணைந்து நேர்வழியில் பயணிக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றதன் மூலம், தமிழகத்தை பெருமைப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் பாரம்பரியம் கொண்ட பெண், அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

  ஜோ பைடனுக்கும், கமலா ஹாரீசுக்கும், பாடலாசிரியர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமக்கு வாக்களித்திருந்தாலும், அளிக்காவிட்டாலும் அனைவருக்குமான அதிபராக தாம் செயல்பட உள்ளதாக பைடன் கூறியிருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். குடை பிடித்து தடுத்தாலும், மழை பெய்து கொண்டுதான் இருக்கும் எனவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க...இது தொடக்கமே தவிர முடிவல்ல - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி உரை  இதேபோல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்டோரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
  Published by:Vaijayanthi S
  First published: