கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க நிதி திரட்டும் உலக நாடுகள்...!

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க நிதி திரட்டும் உலக நாடுகள்...!
கோப்புப் படம்
  • Share this:
கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் போராடிவரும் நிலையில், அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க நிதி திரட்டும் முயற்சியில் வளர்ந்த நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. அதில் அமெரிக்கா பங்கேற்காது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலங்கள், தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டன், நர்வே, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய யூனியனும் ஒருங்கிணைந்து நிதிதிரட்டும் பணியை முன்னெடுத்துள்ளன. ஜப்பான், கனடா, தென் ஆப்பிரிக்கா உட்பட 12 நாடுகள் நிதி திரட்டும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


உலக வங்கி, பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் போன்ற சர்வதேச அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட பணக்காரர்களிடமிருந்தும் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் இந்த முக்கியமான முயற்சியில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

நார்வே சார்பாக 7,500 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் எர்ணா சோல்பெர்க் அமெரிக்காவின் முடிவு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். நிதிதிரட்டும் முயற்சியில் இணைந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, தடுப்பு மருந்து பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு நியாமான விலை வழங்கப்படுவதுடன் தடுப்பு மருந்து அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அமெரிக்காவும் இந்த நிதி திரட்டலில் இணையும் என்றும் மெக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியை பெறும் நிறுவனங்கள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பட்சத்தில் அதற்கான காப்புரிமையை வைத்துக் கொண்டாலும், தடுப்பு மருந்து உலக அளவில் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி உள்ளது.

உலக அளவில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்கு வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் ஆன்லைனில் நிதி திரட்டப்படும என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் இந்த முயற்சிக்கு, பிரபல பாப் பாடகி மடோனா சுமார் 8 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக திரட்டப்படும் 60,000 கோடி ரூபாய், மருந்து கண்டுபிடிப்பு, தயாரிப்பு, விநியோகம், சிகிச்சை மற்றும் வைரசை கண்டறியும் உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரட்டப்படும் நிதியில் ஒரு பங்கு உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.










Also see...
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading