இந்த உலகம் உதித்த காலத்தில் இருந்து இங்கு ஒவ்வொரு உயிரினமும் வாழ முக்கியம் இந்த பூமியின் சுற்றுச்சூழல் தான். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் , மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாதது.
சுற்றுசூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்விற்கு அவசியமானது. இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும்.
வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மனிதன் நாகரிகம் என்ற ஓன்றை உருவாக்கத் தொடங்கியதிலிருந்தே வளர்ச்சி அதன் அங்கமாக மாறிவிட்டது. மாற்றம் நன்மையை மட்டும் கொடுக்காது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் அவற்றை உள்ளிழுத்து வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
விதைத்தவன் அதன் பலனை அறுக்கத்தானே வேண்டும். மாசுப்பொருட்களை சுற்றுசூழலில் கலந்தவன் அதன் விளைவுகளை அனுபவிக்கவும் வேண்டும். அப்படித் தான் கடந்த நூற்றாண்டுகளில் சுற்றுசூழல் மாசின் விளைவுகளான புவி வெப்பமயமாதல், அதனால் ஏற்படும் வானிலை மாற்றம், பஞ்சம், வெள்ளம், பனிச்சறுக்கு, காலநிலை மாற்றம், நோய்பரவல் என்று மனித இனம் சந்தித்து வருகிறது. இது மனிதனை மட்டும் பாதிக்காமல் ஒட்டு மொத்த உயிரினக் கூட்டத்தையே பாதிக்கிறது. அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
4500 ஆண்டுகள் பழைய உலகின் மிகப்பெரிய உயிரினத்தின் அளவு எவ்வளவு தெரியுமா ?
மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம், அவை இல்லையெனில் நாம் சுவாசிக்க காற்று கிடைக்காது. வெப்பநிலை சமன்படுத்தும் முக்கிய பணியை மரங்கள் தான் செய்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக பூமி 1°Cவரை வெப்பமானால் பூமி தாங்கும். ஆனால் இன்றைய உலகின் நகரமயமாதல், காடுகள் அழிப்பால் 2°C வரை வெப்பம் அதிகரிக்கிறது. இதைத்தடுக்க கார்பன் கிரெடிட் என்ற பெயரில் பசுமையில்ல வாயு வெளியேற்றலைக் குறைத்து வருகிறது ஐக்கிய நாடுகளின் சுற்றுசூழல் மேம்பாட்டு மையம். எனவே காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
1972-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசநிலை கருதி, ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிபுணர்கள் கொண்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தினால் மட்டும் தீர்வாகாது. சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது அவசியம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச்சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் ‘
ஒரே ஒரு பூமி.’ அறியப்பட்ட அனைத்து விண்மீன் திரள்கள், நட்சத்திர கூட்டங்கள் மற்றும் கிரகங்களில், பூமி மட்டுமே உயிர்களை ஆதரிக்கிறது என்ற உண்மையை இக்கருப்பொருள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மனித செயல்கள் நமது சுற்றுச்சூழலுக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துவதால், நமது உயிர்க்கோளத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவதைக் குறைக்க அல்லது தடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்பதை நினைவுறுத்துகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.