கொரோனா தாக்கம்: வேலைச்சுமை, வேலையிழப்பு, பொருளாதார சிக்கலை தீர்க்க அரசு உதவ வேண்டும்...பெண்கள் கோரிக்கை

கொரோனா தாக்கம்: வேலைச்சுமை, வேலையிழப்பு, பொருளாதார சிக்கலை தீர்க்க அரசு உதவ வேண்டும்...பெண்கள் கோரிக்கை

பெண்கள்

குடும்பத்தையும் கவனித்து கொண்டு, தங்களுக்கு தேவையான அத்தியாவசியத்தையும் ஒற்றை ஆளாக செய்த பல பெண்களின் வாழ்க்கையில் கொரோனா தாக்கம் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கோவிட்19 என்னும் கொரோனா வைரஸ் தொற்றால் நேரடியாக பலர் பாதிக்கப்படாவிட்டாலும் அதன் தாக்கத்தில் சிக்கி பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டிலிருந்த இல்லத்தரசிகளும், இதுநாள் வரை அலுவலகம் சென்று விட்டு பின் திடீரென வீட்டிலிருந்து அலுவலக வேலைகளையும் பார்த்து கொண்டு, குடும்பத்தினரையும் பார்த்து கொண்ட பெண்களும் ஏராளம். அதே போல பல ஆண்டுகளாக பார்த்து கொண்டிருந்த வேலையும் திடீரென கொரோனா தொடர்பான பிரச்னைகளால் பலருக்கும் பறிபோனது. குடும்பத்தையும் கவனித்து கொண்டு, தங்களுக்கு தேவையான அத்தியாவசியத்தையும் ஒற்றை ஆளாக செய்த பல பெண்களின் வாழ்க்கையில் கொரோனா தாக்கம் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் தொற்றுக்கு பிந்தைய இந்த காலகட்டத்தில் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 1,600-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இருந்தனர். கணக்கெடுப்பில் பங்கேற்ற பெண்களில் 12 சதவீதம் பேர் தொற்றுநோயின் போது வேலை இழந்ததாகக் கூறியுள்ளனர். இதில் 92% பேர் கொரோனா தொற்றுநோயால் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை சமாளித்து மீண்டு வர அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். பெண்களுக்கான கொள்கைகள், குழந்தை பராமரிப்பு ஆதரவு மற்றும் இல்லத்தரசிகளுக்கு இழப்பீடு போன்றவற்றில் பெண்கள் அரசாங்க உதவியை எதிர்பார்ப்பதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

அரசு மற்றும் தனியார் துறையில் பெண்களின் பங்கு முன்பை விட அதிகரித்துள்ள போதிலும், பச்சாத்தாபம் அல்லது பாலியல் துன்புறுத்தல்களைத் தொடந்து பெண் ஊழியர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. தொற்று காரணமாக வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறையில் ஏராளமான புதிய விதிகளை நிறுவனங்கள் புகுத்தியுள்ளன. பொருளாதார உறுதியற்ற தன்மையைச் சமாளிக்க பல நிறுவனங்கள் ஊழியர்களை நீண்ட நேரம் வேலை வாங்குவது உள்ளிட்ட பல சுமைகளை தங்கள் மேல் ஏற்றப்படுவதாக ஆய்வில் பங்கேற்ற பெண்கள் புகார் கூறி உள்ளனர். வீட்டிலிருந்து அலுவலக வேலையை செய்யும் போது, ஒவ்வொரு நான்கு பெண்களில் ஒருவர் வீடு மற்றும் அலுவலக வேலைகளை நிர்வகிக்க சிரமப்படுகின்றனர். மேலும் இவர்களில் 15% பேர் தங்கள் பணிச்சுமை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோய் மக்களை வீட்டிற்குள் அடைத்தால், வீட்டு வன்முறை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை அதிகரித்தன. லாக்டவுன் நேரத்தில் ஒவ்வொரு நான்கு பெண்களில் ஒருவர் தங்களுக்கு வீட்டில் பாதுகாப்பற்ற அனுபவம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். கொரோனா நேரத்தில் வேலையிழப்புகள், ஊதியக் குறைப்புக்கள், வீட்டு வன்முறைகள் உள்ளிட்டவற்றால் தங்கள் வாழ்க்கை பாதித்துள்ளதாக ஆய்வில் பங்கேற்ற பல பெண்கள் கூறி உள்ளனர். தற்போது பெண்கள் வெளிப்படையாக தங்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவதால், இதை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அரசாங்கம் பெண்களுக்கேற்றவாறு மேலும் பல புதிய கொள்கைகளை வடிவமைக்க உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் அரசாங்கத்திடமிருந்து வேலையின்மைக்கான நிதி உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர். ஒற்றை தாய்மார்களை பொறுத்தவரை, தொற்றுநோய் இன்னும் பல கஷ்டங்களை கொடுத்துள்ளது. இவர்களில் பலர் தங்கள் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இவர்கள் இப்போது குழந்தை பராமரிப்பில் சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறார்கள். கொரோனாவிலிருந்து உலகம் மீண்டு வரும் சூழலில் எண்ணற்ற பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது அரசு மற்றும் சமூகத்தின் கடமையாக இருக்கிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: