1980 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் அதிபராக இருந்த 33 வயதான இளைஞர் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இந்த வயதில் உங்களுக்கு பணம், புகழ் எல்லாம் கிடைத்து விட்டது. இனி என்ன வேண்டும்? என்று தொகுப்பாளர் கேட்க, இவையெல்லாம் பெரிதல்ல என்றும், தான் எப்போதும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க விரும்புவதாகவும் பதிலளித்தார் .
டிரம்பின் அந்த எண்ண ஓட்டம்தான் அமெரிக்காவில் அதிக வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக அவரை ஆக்கியது. சமீபத்தில் நடிகர் தனுஷின் பாடல் ஒன்றை அதிபர் டிரம்பின் காட்சிகளோடு இணைத்து வெளியிடப்பட்ட வீடியோ இணையத்தளத்தில் வைரலாகப் பரவியது. என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் எனத் தொடங்கும் இந்தப் பாடலின் வரிகளுக்கு பொருத்தமான நபர் ஒருவர் உண்டென்றால் அது டிரம்பை தவிர வேறு யாராக இருக்க முடியும்.
1946 ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக் கிறிஸ்ட் டிரம்ப் (Frederick Christ Trump) மற்றும் மேரி ஆனி டிரம்ப் தம்பதியருக்கு பிறந்த நான்காவது மகன் டொனால்ட் டிரம்ப். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற டிரம்ப் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தன் தந்தையின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1971-இல் நிறுவனத்தின் முழு பொறுப்பும் டிரம்பிடம் வர முதல் வேலையாக பல்வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தை டிரம்ப் ஆர்கனைசேஷன் என்னும் நிலையான பெயராக மாற்றினார்.
1980ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள தி கிராண்ட் ஹயாட் ஹோட்டலை புதுப்பித்ததன் மூலம் தொழிலில் முன்னோடி என்ற இடத்தை பிடித்தார். அதன் பின்னர் தொழிலின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப் பல்வேறு நடுகளிலும் நட்சத்திர ஹோட்டல்கள், கோல்ஃப் கிளப்புகளுக்கு சொந்தக்காரராக உருவெடுத்தார். திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தலை காட்டிய டிரம்பை 2004 முதல் 2015 வரை என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அப்ரண்டிஸ் தொடர் நாடறியச் செய்தது.
1987 லேயே குடியசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட டிரம்ப் பின்னர் அதிலிருந்து வெளியேறினார். 1999 ல் சீர்திருத்தக் கட்சியில் இணைந்த டிரம்ப் 2000 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெறாததால் போட்டியிலிருந்து விலகினார்.
2012 ஆம் ஆண்டு ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த டிரம்ப் பின்னர் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்த போது அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் 2016 ஆம் ஆண்டு, தான் எண்ணியபடியே அமெரிக்காவின் அதிபராக அரியணை ஏறினார் டிரம்ப்.
அதிபரான பின்னர் அதிகமான சர்ச்சைகள் டிரம்பைச் சுற்றி வந்தன. தினசரி சராசரியாக 7 ட்வீட் செய்கிறார் என்பதில் தொடங்கி பாலியல் குற்றச்சாட்டுகள் வரை பல்வேறு புகார்களுக்கு ஆளானார் டிரம்ப். ஆனால் கொரோனா வைரஸ் என்பது வைரஸே அல்ல: அது வெறும் காய்ச்சல் தான் என்று கூறிவிட்டு, தானே பாதிக்கப்பட்டபோதும், தளராமல் பிரசாரத்துக்குப் புறப்பட்டது போல அத்தனை சர்ச்சைகளையும் கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.
மேலும் படிக்க...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை.. ட்ரம்புக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு..
கருத்துக் கணிப்பு முடிவுகள் பைடனுக்கு சாதகமாக வரும் நிலையில், அதிபர் தேர்தலின் முடிவுகளை நான் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம் எனக்கூறி எல்லோரையும் அதிர வைத்திருக்கிறார் டிரம்ப். அப்படி ஒருவேளை அவர் ஏற்றுக் கொள்ளமால் போனால் அமெரிக்க அரசியலில் என்ன நடக்கும் என்ற விவாதங்கள் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன.
மேலும் படிக்க... அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்.. உலகமே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள்.. அடுத்த அதிபர் யார்?
இப்படி எதையாவது கொளுத்திப் போட்டு விட்டு தன் வேலையை பார்க்கப்போய் விடும் டிரம்புக்கு 2020 தேர்தல் கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.