Home /News /international /

உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்க திட்டமிடும் ரஷ்யா.. தடுக்கும் அமெரிக்கா - பின்னணி என்ன?

உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்க திட்டமிடும் ரஷ்யா.. தடுக்கும் அமெரிக்கா - பின்னணி என்ன?

Russia - ukraine crisis

Russia - ukraine crisis

Russia -Ukraine Crisis: உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் கிடையாது என ரஷ்யா தெரிவித்தபோதிலும் அங்கு நிலவும் சூழல் பதற்றத்தை தணிக்கும் வகையில் அமையவில்லை.

    ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்கு பின்னதாக, உக்ரைன் நாட்டை ரஷ்யா ஆக்கிரமிக்க இருப்பதாக கூறப்படும் விவகாரம் தான் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிக்கிறது.

    உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்நாட்டின் மீது மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    உக்ரைன் - ரஷ்யா: என்ன பிரச்னை?

    முந்தைய சோவியத் யூனியனில் அங்கமாக ரஷ்யாவும், உக்ரைனும் இருந்தன. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னர் உக்ரைன் தனி நாடாக மாறியது. இரு நாடுகளுமே ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளாக திகழ்கின்றன. உக்ரைன் NATO மற்றும் ஐரோப்பிய யூனியனில் இணைய திட்டமிட்டுள்ளது. இது ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    Also read:  ரஷ்யாவுக்கு ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை.. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல்

    ரஷியாவுக்கும் உக்ரைன் நாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உக்ரேனியர்கள் தங்கள் ரஷ்ய சார்பு ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்தபோது, ​​ரஷ்யா, உக்ரைனின் தெற்கு கிரிமியா தீபகற்பத்தை கிளர்ச்சியாளர்களின் துணையுடன் கைப்பற்றி தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

    ரஷ்யாவை ஒட்டிய எல்லையிலும், உக்ரைனையை ஒட்டிய ரஷ்யாவின் ஆதரவு நாடான பெலாரஸ் எல்லைகளிலும் ரஷ்யா பெரும் அளவிலான படைத்துருப்புகளை குவித்து வருகிறது. சுமார் ஒரு லட்சம் ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் ரஷ்யா குவித்திருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கலாம் எனவும் தெரியவருகிறது.

    Also read:   2021 உலகளாவிய ஊழல் குறியீடு: இந்தியா முன்னேற்றம் - பாகிஸ்தானுக்கு கடும் சரிவு..

    உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் கிடையாது என ரஷ்யா தெரிவித்தபோதிலும் அங்கு நிலவும் சூழல் பதற்றத்தை தணிக்கும் வகையில் அமையவில்லை. ராஜாங்க அடிப்படையிலான பேச்சுவார்த்தையும் பயனற்று போயிருக்கிறது. ஐரோப்பியாவில் இருந்து நேச (NATO) படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது ரஷ்ய அதிபர் புதினின் வாதமாக இருக்கிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு:

    உக்ரைனின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே 1994-ல் ‘உக்ரைனுக்கான புடாபெஸ்ட் மெமோராண்டம் பாதுகாப்பு உத்தரவாதங்கள்’ கையெழுத்தானது. கிரீமியா பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததன் மூலம் ரஷ்யா அந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா உக்ரைனுக்கு துணையாக வருகிறது. மேலும் ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு படைகளை அனுப்ப அமெரிக்காவும் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக 5,000 வீரர்களை கிழக்கு ஐரோப்பாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைக்கும் என தெரியவந்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Russia

    அடுத்த செய்தி