ஒரு மாதத்திற்கும் மேலாக குழப்பமான சூழல் நிலவி வந்த இலங்கையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார்.
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு கடந்த அக்டோபர் 26-ம் தேதி ராஜபக்சவை புதிய பிரதமராக அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்ததில் இருந்து இலங்கையில் அரசியல் குழப்பம் தொடங்கியது.
அதிபரின் முடிவை ஏற்காத ரணில் விக்ரமசிங்கே, பிரதமருக்கான அரசு வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால், இலங்கையில், குதிரைப்பேரங்களும், கட்சி தாவல்களும் வெளிப்படையாக நடைபெற தொடங்கின.
இதில், முக்கிய திருப்பமாக நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும், ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால், இதற்கு இடைக்கால தடை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.
இதில் கடந்த 15-ம் தேதி கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது, இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாறு காணாத அமளி ஏற்பட்டது.
அடுத்தடுத்து நிகழ்வுகளால், பின்னடைவை சந்தித்த ராஜபக்சவுக்கு, பிரதமர் அலுவலக செலவுகளை செய்ய தடை விதிக்கும் தீர்மானம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார்.
இத்தகைய குழப்பமான சூழலில், இலங்கையின் எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ரணிலின், ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் பிரதிநிதிகளை நேற்று தனித்தனியாக சந்தித்து அதிபர் சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, வரும் 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க உள்ளதாகவும் கூறியதாக தெரிகிறது.
மேலும், ராஜபக்ச பெரும்பான்மை பலம் இல்லை என்பதை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பான வழக்கு 7-ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதற்கு முன்பே இலங்கையின் பிரதமர் யார் என்பது முடிவாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் சிறிசேனவின் இந்த அறிவிப்பு, இலங்கை அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.
Also see... 39 மனைவிகள்... 94 குழந்தைகள்... ஒற்றுமையாக வசிக்கும் குடும்பம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mahinda Rajapakse, Maithripala Sirisena, Ranil Wickremesinghe, Srilanka