பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், நாடு பெரும் பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டு வருகிறது. சொந்த கட்சியில் அழுத்தம் காரணத்தினால் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் நின்ற நிலையில், லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நிலவும் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அதனையடுத்து ஆளும் கட்சியின் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பான நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவைப் பெற்று கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வாகியுள்ளார்.
ஒரு காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டன் நாட்டை ஆளப்போகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
யார் இந்த ரிஷி சுனக்:
42 வயதான ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் சவுத்ஹாம்ப்டன் பகுதியில் பிறந்தவர். இவரின் தந்தை அந்நாட்டின் சுகாராத்துறையில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். தாயார் மருந்துக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் தாத்தா பாட்டி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப்பில் இருந்து அவர்கள் கிழக்கு ஆப்ரிக்காவுக்குக் குடிபெயர்ந்த நிலையில், 1960களில் பிரிட்டன் நாட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளனர்.
வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தார். உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ்சில் முன்னணி பொறுப்புகளை வகித்து வந்தார்.
Also Read : பிரிட்டனின் பிரதமராகும் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் - போட்டியின்றி தேர்வானார்!
இந்தியாவின் மருமகன் ரிஷி சுனக் :
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படிக்கும்போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இந்தியாவில் உள்ள மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். இந்தியாவில் ஐடி செக்டாரின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.
ரிஷி சுனக் கடந்து வந்த அரசியல் வாழ்க்கை:
2015ஆம் ஆண்டில் தீவிர அரசியல் களத்தில் குதித்த ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு ரிச்மன்ட் பகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். பிரெக்சிட் ஆதரவாளரான இவர், அன்றைய பிரதமர் தெரேசா மேவின் அரசில் அமைச்சராக பணியாற்றினார்.
2019ஆம் ஆண்டு தேர்தலில் போரிஸ் ஜான்சன் பிரதமராக ஆதரவு அளித்து பரப்புரை செய்தார் ரிஷி. தேர்தலில் வென்று போரிஸ் ஜான்சன் பிரதமரான நிலையில், ரிஷி சுனக்கிற்கு நிதித்துறை தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
பின்னர் 2020ஆம் ஆண்டில் பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோருக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் அமைச்சரவை பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது. கோவிட் காலத்தில் ரிஷி சுனக் நிதித்துறையில் செய்த நடவடிக்கைகள் அவருக்குப் பாராட்டுகளைத் தந்துள்ளது.
Also Read : மரண குழியில் இருந்து போலீசாருக்கு சென்ற போன்கால்.. சினிமாவை மிஞ்சும் ஷாக் சம்பவம்!
அதே வேளை, குறுகிய காலத்திலேயே அரசியலில் இவர் பெரும் வளர்ச்சி பெற்றதற்கும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தியர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்கள் இருந்த நிலையில் தற்போது ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்பட்டது பெருமைக்குரியதாக இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Britain, Prime minister, UK