முகப்பு /செய்தி /உலகம் / ஒற்றை நபருக்காக உலக நாடுகளை பகைத்த பெலாரஸ் - யார் அந்த ரோமன் புரோட்டசெவிச்?

ஒற்றை நபருக்காக உலக நாடுகளை பகைத்த பெலாரஸ் - யார் அந்த ரோமன் புரோட்டசெவிச்?

ரியான் ஏர் விமானம்

ரியான் ஏர் விமானம்

பெலாரஸ் வான் பகுதிக்குள் நுழைந்த போது தங்கள் நாட்டு போர் விமானத்தை அனுப்பி வைத்த பெலாரஸ், அந்த விமானத்தை தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்கச் செய்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

செய்தியாளர் ஒருவரை கைது செய்வதற்காக நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தை, போர் விமானம் மூலம் வழிமறித்து கட்டாயப்படுத்தி தரையிறங்கச் செய்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பெலாரஸ் நாடு. இப்படி ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்து சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பெற்று ஒரு செய்தியாளரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் செய்த குற்றம் என்ன?

ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான பெலாரஸ் கடந்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தன்னை குடியரசு நாடாக பிரகடனம் செய்து கொண்டது. 1994ம் ஆண்டு முதல் பெலாரஸ் நாட்டின் அதிபராக இருந்து வரும் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தேர்தல்களில் முறைகேடு செய்தே அதிபராக 27 ஆண்டுகாலம் நீடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அலெக்சாண்டருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக தன்னை விமர்சிப்பவர்களை அலெக்சாண்டர் ஒடுக்கி வருகிறார். அவருடைய பெரும்பாலான அரசியல் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரோமன் புரோட்டசெவிச் என்ற 26 வயதுடைய செய்தியாளர் அலெக்சாண்டருக்கு எதிரான போராட்டங்களை ஒளிபரப்பு செய்து வந்தார். சமூக ஊடகமான டெலிகிராமில் அவர் தொடர்ந்து அலெக்சாண்டருக்கு எதிரான போராட்டங்களை லைவ் செய்து வந்ததால் அவர், கிளர்ச்சிக்கு தூண்டிய காரணங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

ரோமன் புரோட்டசெவிச்

இந்த நிலையில் கடந்த மே 25ம் தேதி கிரீஸில் இருந்து லித்துவேனியா நாட்டிற்கு Ryanair பயணிகள் விமானத்தில் செய்தியாளர் ரோமன் பயணம் செய்த தகவல் கிடைத்ததையடுத்து அந்த விமானம் பெலாரஸ் வான் பகுதிக்குள் நுழைந்த போது தங்கள் நாட்டு போர் விமானத்தை அனுப்பி வைத்த பெலாரஸ், அந்த விமானத்தை தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்கச் செய்தது.

Read More:  நாய் குட்டியை ஹைட்ரஜன் பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடியூபர் - விபரீத முயற்சியால் போலீசில் சிக்கினார்! வைரல் வீடியோ...

பிற பயணிகளிடமிருந்து செய்தியாளர் ரோமன் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். முதலில் வெடிகுண்டு மிரட்டல் என கூறி தான் விமானத்தை தரையிறக்கி உள்ளனர். பின்னர் தான் செய்தியாளரை கைது செய்வதற்கான நடவடிக்கை இது என பயணிகளுக்கு தெரிந்தது. தனக்கு மரண தண்டனை கொடுத்து விடுவார்கள் என்று கைது செய்யப்பட்டபோது ரோமன் கூச்சலிட்டார்.

பெலாரஸ் நாட்டின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஐரோப்பிய யூனியனும் பெலாரஸ் மீது பொருளாதார தடைகள் விதித்திருக்கிறது. அதே போல பல விமான நிறுவனங்களும் பெலாரஸ் வான் பகுதியை தவிர்த்துள்ளன.

First published: