Home /News /international /

மாஸ்க் கேள்வி பட்டிருக்கோம், அது என்னப்பா ‘கோஸ்க்’ - இது தென் கொரியாவின் அட்ராசிட்டி…

மாஸ்க் கேள்வி பட்டிருக்கோம், அது என்னப்பா ‘கோஸ்க்’ - இது தென் கொரியாவின் அட்ராசிட்டி…

மாஸ்க்

மாஸ்க்

தென்கொரியாவில் மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் மாஸ்க் ஒன்றை தயார் செய்துள்ளது அட்மான் என்ற நிறுவனம்.

என்ன நேரத்துல கொரோனா வந்ததோ ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் கொரோனா என்றார்கள், பின்னர் டெல்டா என்றார்கள், அப்புறம் ஒமைக்ரான் என்றார்கள். இது மட்டுமா இன்னும் ஏராளமான பெயர்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் புது, புது அவதாரங்கள் எடுத்து உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது கொரோனா.

கொரோனா வந்த நாள் முதல் இன்றைய நாள் வரையிலும் மனித குலம், அதை எதிர்கொள்ள வித விதமான தடுப்பூசிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் என கண்டுபிடிப்புகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர்.

கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸுக்கும், ஏழேழு கண்டங்களும் போதாது என்று, விண்வெளியையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இந்தப் போர் எப்போது முடிவுக்கு வருமோ தெரியவில்லை.

சரி, விஷயத்துக்கு வருவோம். கொரோனா என்றதுமே நம் மனதுக்கு டக் என்று தோன்றுவது மாஸ்க் என்பதாகத்தான் இருக்க முடியும். பள்ளி, கல்லூரிகள், பணியிடங்கள், மருத்துவமனை மற்றும் பீச், தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்கள் என எங்கு சென்றாலும் 2 ஆண்டுகளாக தவறாமல் நம்முடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பொருள் மாஸ்க் தான்.

இதையும் படியுங்கள் : கரடி நிற்கும் தடுப்பு வேலிக்குள் 3 வயது குழந்தையை வீசிய தாய் - அடுத்து நடந்தது என்ன?

உண்மையை சொல்வதானால், மக்களில் எத்தனை பேர் அதை வேண்டா, வெறுப்பாக அணிந்து வருகிறோம். இதற்கான பதிலை மனசாட்சியிடம் விட்டுவிடுவோம். ஆனால், பெரும்பாலான மக்கள் சொல்லும் கருத்து இதுதான். இந்த மாஸ்க் போட்டுக் கொண்டு வெளி இடங்களில் எப்படி சாப்பிடுவது, தண்ணீர், கூல்டிரிங்க்ஸ் எப்படி குடிப்பது? என்ற கேள்வியை அதிகம்பேர் முன்வைத்திருப்பார்கள்.

அதற்கு தான் விடை தருகிறது தென் கொரிய நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்பு. ஆம். அதற்கு பெயர்தான் ‘கோஸ்க்’. கோ என்றால் தென்கொரிய மொழியில் மூக்கு என்று அர்த்தமாம். அதைத்தான் கொஞ்சம் சேர்த்து கோஸ்க் என பெயர் வைத்துள்ளார்கள். மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் இதை தயார் செய்துள்ளது அட்மான் என்ற நிறுவனம். ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

  

  

  

  

  

  

  

கே.எஃப்.80 என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றொரு வடிவமைப்பு கொண்ட கோஸ்க், எப்போதும் போல முகத்தையும், வாயையும் மூடும் வகையில் இருக்கும். ஆனால், அதை வாடிக்கையாளர்கள் மடித்துக் கொள்ளலாம்.

 

  

  

இந்த கோஸ்க் குறித்த செய்தி, கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என கருதும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது. சுமார் 0.3 மைக்ரான் அளவு சிறிய துகள்களையும், கிருமிகளையும் தடுக்கக் கூடிய அளவில் 80 சதவீத செயல்திறன் கொண்டதாக இந்த கோஸ்க் இருக்கிறதாம். ஆனால், வழக்கம்போல, நெட்டிசன்கள் இதை செம்மையாக கிண்டல், கேலி செய்து வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Face mask, South Korea

அடுத்த செய்தி