செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ராஜதந்திரமாக பதிலளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் பொறுப்பற்ற பேச்சுகள், கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அதே பாணியை பைடன் கடைபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
ரஷ்ய அதிபருடன் நடந்த உரையாடல் குறித்து கேள்வி எழுப்பிய நிருபருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுத்த ராஜதந்திரமான பதில் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் பைடன், அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை, உலக நாடுகளுடனான உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் அவருக்கு ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் பைடன், தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்கா கவனம் செலுத்தும் விஷயங்கள் குறித்தும் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்து கிளம்பும் தருவாயில், தேர்தலின்போது டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் Fox News தொலைக்காட்சியின் நிருபர் பீட்டர் டூசி, தொலைபேசி வழியாக புடினுடன் உரையாடியது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்துக்கொண்டு, 'YOU' என பதில் அளித்த பைடன், பின்னர் அவரால் இயன்ற அளவிலான நல்லதை அனுப்பியிருக்கிறார் (He sends his Best) என பதில் அளித்தார். பைடனின் பதில் அங்கிருந்த செய்தியாளர்கள் அனைவருக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை ரெக்ஸ் சாப்மேன் (Rex Chapman) தனது டிவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை அன்று பகிர்ந்தார். நெட்டிசன்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்த இந்த வீடியோ கலவையான விமர்சனங்களையும் பெற்றது. டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட தொலைக்காட்சியின் நிருபர் எழுப்பிய கேள்விக்கு தனக்கே உரித்தான பாணியில், ராஜதந்திரமாக பைடன் பேசியிருப்பதாக பலர் வாழ்த்தியுள்ளனர்.



செய்தியாளர் சந்திப்பின்போது அவரின் அணுகுமுறை, முன்னாள் அதிபரை விட மேம்பட்டதாகவும், தரமானதாகவும் இருந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் சிலர் பைடனின் அணுகுமுறையை விமர்சித்துள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் பொறுப்பற்ற பேச்சுகள், கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அதே பாணியை பைடன் கடைபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினால், அதற்கு பொறுப்புடன் பதில் அளிக்காமல் தட்டிக் கழிப்பது சரியான அணுகுமுறை அல்ல என விமர்சித்துள்ளனர்.

கேள்விகளை தவிர்ப்பதைவிட, பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பது மிகவும் ஆபத்தானது எனவும் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சித்த பைடன், கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பற்றி விசாரிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். புடினின் செயல்பாடுகள் மற்றும் மற்ற நாடுகள் மீது ரஷ்யா செலுத்தும் ஆதிக்கம் குறித்தும் பைடன் விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பைடன், புடின் உடன் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளார்.

அதில், இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதாகவும், உலக நடப்புகள் குறித்து இருவரும் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனின் இறையாண்மையை அமெரிக்கா உறுதி செய்யும் எனவும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது ரஷ்யாவின் தாக்குதல், ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் நவால்னி மீதான கொலை முயற்சி ஆகியவை குறித்து புடினிடம் பைடன் பேசியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் அதிபர் புடினிக்கு எதிராக போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, எதிர்கட்சி தலைவர் நவால்னி மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குலுக்கு பிறகு புடின் மீது அந்நாட்டு மக்களிடையே வெறுப்பு அதிகரித்துள்ளது. சிகிச்சை முடிந்து அண்மையில் நாடு திரும்பிய நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Published by:Arun
First published: