உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ரஷ்ய படைகள் சுமார் 40 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து செல்வது தொடர்பாக சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குடியிருப்புகள் மீதும் ரஷ்யா தக்குதல் நடத்துவதால், பலரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதேசமயம், மிகவும் இக்கட்டான சூழலில் தான் நமக்குள் இருக்கும் மனிதநேயம் வெளிப்படும். அப்படியொரு நிகழ்வு, கீவ் நகரில் நடைபெறுகிறது. அதுவும் இந்திய உணவகம் ஒன்றின் மூலம் போர் பதற்றம் இருக்கும் போதும், மனிதநேயம் வெளிப்படப்படிருக்கிறது. கீவ் நகரில் ‘சத்தியா’ என்ற பெயரில் மணீஷ் தேவ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகம் ஒரு கட்டடத்தின் பேஸ்மண்ட் தளத்தில் இருப்பதால், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கும் புகலிடமாக மாறியுள்ளது.
இதுகுறித்து மணீஷ் தேவ் கூறுகையில், “நான் ஒவ்வொரு நபருக்கும் உணவு வழங்கி வருகிறேன். இங்கு இப்போது மொத்தம் 125 நபர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார். இந்த புகலிடத்தில், இந்திய மாணவர்கள் மற்றும் உக்ரைன் குடிமக்கள் பலர் இருக்கின்றனர். போர் தொடங்குவதற்கு முன்பு, கீவ் நகரில் உள்ள இந்திய மக்களின் உணவு தேடலுக்கு தகுந்த இடமாக சத்தியா ரெஸ்டாரண்ட் இயங்கி வந்தது.
இதையும் படியுங்கள் : உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 7 சிறப்பு விமானங்கள் இந்தியா வந்தடைந்தன
அங்கு தஞ்சம் அடைந்துள்ள இந்திய மாணவர் ஒருவரிடம், டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது, போர் சூழ்ந்த நாட்டில், வீட்டை விட்டு வெளியே இருக்கும் தங்களுக்கு இது மற்றொரு வீடாக உள்ளது என்று அந்த மாணவர் கூறினார். ரஷ்யா போர் தொடுத்த உடனேயே, தேவ் தன்னை ஃபோனில் அழைத்து ரெஸ்டாரண்டில் வந்து தங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார் என்று அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரெஸ்டாரண்ட் வருவதற்கு முன்பாக அந்த மாணவர் ஹாஸ்டலில் தங்கியிருந்தார். ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில், தான் தங்கியிருக்கும் இடம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அவர் இருந்தார். மணீஷ் தேவ் அளிக்கும் சேவைகள் குறித்து அங்குள்ள அமைப்பு ஒன்று டிவிட்டரில் பாராட்டியுள்ளது.
ரெஸ்டாரண்டில் தங்கியுள்ள அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக மணீஷ் தேவ் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்கினாராம்.இருப்பினும், ரெஸ்டாரண்டில் உள்ள உணவுப் பொருட்கள் எத்தனை நாளுக்கு தாக்குப் பிடிக்கும் என்று அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தேவ் கூறுகையில், “4 முதல் 5 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மாவு ஸ்டாக் உள்ளது. ஆனால், இப்போது காய்கறி மற்றும் இதர பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. இரவு 10 மணி முதல் 7 மணி வரையில் நடமாடுவதற்கு கட்டுப்பாடு உள்ளது’’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.