‘இவங்களோட வாழ்றதுக்கு பதிலா ஜெயிலே மேல்’ என தெரிவித்த காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீசில் சரண் அடைந்த சம்பவம் ஆச்சரியத்தை தந்துள்ளது.
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் மாகாணத்தை சேர்ந்த காவல்துறையால் தேடப்படும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் கடந்த புதனன்று Burgess Hill காவல் நிலையத்திற்கு நேரில் வந்து சரண் அடைந்துள்ளார். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களுக்காக காவல்துறையால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். பல நாட்களாக இவருக்காக காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் அவர் தாமாக முன் வந்து சரண் அடைந்தற்கு கூறிய காரணம் வியப்பையும், ஆச்சரியத்தையும் தந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாக இங்கிலாந்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர் தன்னுடன் வசித்து வந்த குடும்பத்தினரால் அதிருப்தி அடைந்துள்ளார். எனவே தனக்கு அமைதி தேவை என்றும், இவர்களுடன் மேலும் நேரத்தை செலவிட்டு அதிருப்தி அடைவதற்கு பதிலாக சிறைக்கு செல்வதே மேலானது என கருதி சரணடைவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் சிறையில் தனக்கான அமைதியான நேரம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு காவல்துறையினர் வியப்படைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் வியப்படைந்த சஸ்செக்ஸ் மாகாண காவல் நிலைய ஆய்வாளர் டேரன் டெய்லர் என்பவர் இந்த தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பலரும் பல்வேறு விதமான சுவாரஸ்ய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவரை நீதிபதி வீட்டுக் காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுவே அவருக்கு சிறந்த தண்டனையாக இருக்கும் என்று ஒருவர் நக்கலடித்துள்ளார்.
மற்றொருவரோ இத்தனை பெரிய குற்றவாளியையே அமைதியை தேடி ஓட வைத்த அவரின் குடும்பத்தினர் எப்படிப்பட்ட மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் என கேட்டுள்ளார். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.