உலக நாடுகளில் உணவு உற்பத்தி மற்றும் வர்த்தகம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உணவு மற்றும் வேளாண் அமைப்பு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மிகவும் பின்தங்கிய, நலிவடைந்த நாடுகள் குறைந்த உணவிற்காக அதிக செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியதாவது, நடப்பு ஆண்டில் உலக நாடுகளில் உணவு இறக்குமதி மதிப்பானது வரலாறு காணாத அளவில் 1.8 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது உணவு பொருள்களின் அளவு உயர்ந்ததால் ஏற்படவில்லை. மாறாக இந்த சுமையானது போக்குவரத்து செலவு மற்றும் உணவு பொருள்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் உணவு பொருள்களின் விலை 49 பில்லியன் டாலர் உயரும் அபாயம் உள்ளது. இது நலிவடைந்த நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உணவு பாதுகாப்பை கேள்விக்குரியாக்கிவிடும். விலை உயர்வால் நலிவடைந்த நாடுகள் உணவு இறக்குமதி மேற்கொள்வதில் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
உணவு பொருள்களின் உள்ளீட்டு விலை, கால நிலை மாற்றம், உக்ரைன் போர் காரணமாக நிலவும் அசாதாரண சூழல் ஆகியவை இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. எனவே, நலிவடைந்த நாடுகளுக்கு உணவு இறக்குமதி செய்ய நிதி உதவி செய்து வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வறிக்கையின் படி, விலங்குகளின் கொழுப்பு மற்றும் காய்கறி எண்ணெய் தான் விலை உயர்வில் பிரதான பங்கை அளிக்கின்றன. அதேபோல் பருப்புகள் விலைகளின் உயர்வு காரணமாக வளரும் நாடுகள் பருப்புகளின் நுகர்வை குறைத்துள்ளன. அதேபோல் நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக பருப்புகளின் உற்பத்தி குறைய உள்ளது.
இதையும் படிங்க:
வடகொரியாவில் இருந்து காத்து வாக்கில் பரவுமா கொரோனா.. ஜன்னலை மூடி வைக்க சொன்ன சீனா!
சீனா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பெரும் கிடங்குகளை உருவாக்கி வருவதால் கோதுமை கையிருப்பு நடப்பு ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்தியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கரும்பு உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இந்தாண்டு சர்வதேச சந்தையில் சர்க்கரை உற்பத்தி உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.