ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 தளவாடங்களை வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டாம் என இரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அந்நாட்டின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ரஷ்யா மீது ஆயுத விற்பனை தடை விதித்தது. தடையை மீறி ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பதற்கான சட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றியது.
இந்நிலையில் அதிநவீன எஸ் 400 வான் பாதுகாப்பு தளவாடத்தை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்டது. எதிரிகளின் ஏவுகணை மற்றும் விமானங்களை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இவற்றை வாங்க 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்கும் சூழல் உருவானது.
இந்நிலையில் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டாம் என அதிபர் ஜோ பைடனுக்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மார்க் வார்னர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜான் கார்னின் ஆகிய இருவரும் எழுதியுள்ள இந்த கடிதத்தில், சில நாடுகளுக்கு இத்தகைய தடையிலிருந்து விலக்கு அளிப்பதால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு நன்மை ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
ரஷிய ஆயுத கொள்முதல் குறித்த கவலையை இந்தியாவிற்கு எடுத்துரைத்து பிற நாடுகளிடம் ஆயுதம் வாங்க ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.