வெள்ளை மாளிகை முற்றுகை.. வாஷிங்டன் முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது..

வெள்ளை மாளிகை முற்றுகை.. வாஷிங்டன் முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது..

டிரம்ப்

அமெரிக்காவின் செனட் சபைக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால், தலைநகர் வாஷிங்டன் டிசியில் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக டிரம்ப் பேசியதும் சர்ச்சையைக் கிளப்பவே அவரது சமூகவலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான, அதிகாரப்பூர்வ சான்றிதழை வங்குவதற்கான கூட்டம் வாஷிங்டனில் உள்ள செனட் சபையில் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் செனட் சபையை முற்றுகையிட்டனர். விதிமுறைகளை மீறி சிலர் செனட் சபைக்குள் நுழைந்தனர்.

  அப்போது, காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் போராட்டக்காரர்களை விரட்டியடித்து, செனட் சபை உறுப்பினர்களை பாதுகாப்பாக வேறு கட்டடத்திற்கு மாற்றினர். இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே போலீசாருக்கும் போராட்டாக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி அடித்தனர்.

  செனட் சபைக்கு வெளியே போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பொதுமக்களும் தடுப்புகளை சேதப்படுத்தி, தாக்குதல் நடத்தியதில் ஏராளமான போலீசார் காயமடைந்தனர். வாஷிங்டன் முழுவதும் மாலை 6 மணி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

  மேலும் படிக்க.. டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு 12 மணி நேரம் முடக்கம்

  இதனிடையே, ஜோ பைடனின் கோரிக்கையை ஏற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், தேர்தலில் நம்முடைய வெற்றி திருடப்பட்டுள்ளது என்றார். இருப்பினும், சட்டம் ஒழுங்கை மதித்து அனைவரும் வீடு திரும்பும்படி கேட்டுக் கொண்டார்.

  இதே குற்றச்சாட்டை அவர் தனது டிவிட்டர், பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்ட நிலையில், ட்ரம்பின் கருத்து வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக, அவரது டிவிட்டர்,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதள பக்கங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

  இதனிடையே, 6 மணி நேர கடும் முயற்சிக்குப் பிறகு, வாஷிங்டன் பகுதி கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டது. அதைதொடர்ந்து, இரவு 8 மணிக்குப் பிறகு தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியது. இந்த போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இது நமது தேசத்திற்கான பெரும் அவமானகரமான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக செயல்முறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: