அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 79 வயதாகும் பைடனுக்கு சளி, வறட்டு இருமல் உள்ளிட்ட லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஜோ பைடன் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியுடன், கூடுதலாக இரண்டு டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதையும் மீறி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பைடனுக்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிப்புக்குள்ளான அதிபர் ஜோ பைடன் அதிபர் மாளிகையில் இருந்து காணொலி வெளியிட்டுள்ளார். அதில் தான் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் மீண்டுவந்து வழக்கமான பணியில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளார். தன்னை அக்கறையுடன் விசாரித்தவர்களுக்கு நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
மிதமான அறிகுறிகள் மட்டும் உள்ளதால் நேரடியாக தொடர்புகளை தவிர்த்துவிட்டு, காணொலி மூலம் அதிபர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது கோவிட் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைளை அதிபர் பைடன் பின்பற்றிய போதிலும் தற்போது அவருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்து ஐந்து நாள்கள் அதிபர் பைடன் தனிமையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க
அமெரிக்காவில் கடந்த மே மாதம் முதல் பிஏ.5 ரக கோவிட் தொற்று பரவல் அதிகம் காணப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் பாதிப்பு வெகுவாக அதிகரித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளை அங்கு லாக்டவுன் கட்டுபாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. மாறாக பூஸ்டர் டோஸ், முகக்கவசம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.