Home /News /international /

US election Results 2020: அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் கடந்துவந்த பாதை..

US election Results 2020: அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் கடந்துவந்த பாதை..

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன்

சிறுவயதில் பேசுவதற்கு சிரமம், விபத்தில் மனைவி, மகள் உயிரிழந்ததால் மறுமணம், கருத்தை திருடியவர் என்று குற்றச்சாட்டு, 44 ஆண்டுகால பொது வாழ்க்கை என அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் கடந்த வந்த பாதைகள் ஏராளம். 

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 எலக்ட்ரோல் வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்வாகியுள்ளார். பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது எட்டு ஆண்டுகள் துணை அதிபராகவும், 36 ஆண்டுகள் செனட்டராகவும் பணியாற்றிய ஜோ பைடன், அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளையும், பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

    பெனிசில்வேனியா மாகாணத்தின் ஸ்க்ரான்டனில் பிறந்த பைடன் சிறுவயதில் திக்குவாய் உடையவராக இருந்தார். ஆனால் அதனை ஒரு குறைபாடாகக் கருதவில்லை என்றும் தனக்கு சிந்திக்கக் கிடைத்த நேரமாக மாற்றிக் கொண்டதாகவும் கூறியிருந்தார். வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய பைடன் இரு முறை திருமணம் செய்து கொண்டவர். 1966-ல் நீலியா என்பவரை மணந்தார். அவர்களுக்கு நவோமி, ராபர்ட், ஜோசப் என்ற மூன்று குழந்தைகள். 1972-ம் ஆண்டு நீலியா, மகள் நவோமி ஆகியோர் கார் விபத்தில் மரணமடைந்தனர். இரு மகன்களும் படுகாயமடைந்தனர். அந்த ஆண்டு தான் பைடன் டெலாவரின் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை.. ட்ரம்புக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு..

    படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தன் மகன்களைக் கவனிப்பதற்காக பைடன், தன் பதவியைத் துறக்க முடிவு செய்தார். ஆனால், அவரின் அசாத்திய திறமை கண்ட அப்போதைய செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் அதை ஏற்கவில்லை. எனவே, பைடன் மருத்துவமனையில் தனது மகனின் படுக்கையில் இருந்தவாறே செனட்டராகப் பதவியேற்றார்.

    பைடன் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டப்போது அவருக்கு வயது 29. அமெரிக்க வரலாற்றில் மிக இள வயதில் செனட்டராக தேர்வு செய்யப்பட்ட ஐந்தே பேரில் பைடனும் ஒருவர். தற்போது 78 வயதில் பைடன் அதிபராக தேர்வாகியுள்ளநிலையில், மிக அதிக வயதில் அதிபரானவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

    நீலியாவின் இறப்புக்குப் பிறகு ஜோ பைடன் 1977-ல் ஜில் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆஸ்லே என்ற மகள் உள்ளார். பைடனின் சொந்த வாழ்க்கையில் தொடர் சோகமாக. அவரின் மூத்த மகன், புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். பைடனின் சொந்த இழப்புகள் தான் அவரை, அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற கொள்கையை உயர பிடிக்க தூண்டியது. ஒபாமா ஹெல்த் கேர் திட்டதை பைடன் ஆதரிக்கவும் இதுவே காரணம்.

    புகைப் பழக்கமோ, குடிப்பழக்கமோ இல்லாத பைடன், கால்பந்து, மோட்டார் சைக்கிள், பனிச்சறுக்கு விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒரு காலத்தில் தன்பாலினத்தவர்களின் உரிமைகளுக்கு எதிராக இருந்த பைடன் தனது கருத்துக்களை மாற்றிக்கொண்டு 2012-ம் ஆண்டில் LGBT திருமணம் மற்றும் உரிமைகளை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். 1994-ம் ஆண்டில், அமெரிக்காவில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர பைடனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது

    தற்போதைய தேர்தல் ஜோ பைடன் போட்டியிடும் முதல் தேர்தல் அல்ல. முன்னதாக 1988 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் அதிபர் தேர்தலுக்கான, கட்சி அளவிலான பூர்வாங்கத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார்.

    மேலும் படிக்க.. US election Results 2020: கொரோனா பரவல் காலத்தில் டிரம்ப் பேசிய சர்ச்சை கருத்துகள் என்னென்ன?



    1988- ஆம் ஆண்டு போட்டியிட்ட போது பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவர் நீல் கின்னாக்கின் கருத்தை பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. கருத்தை திருடியவர் என்ற புகாரினால் அந்த தேர்தலில் பைடனால் போட்டியிட முடியாமல் போனது. 2008-ம் ஆண்டில், கட்சியினரிடையே பைடனுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனினும் பராக் ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    2019- ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த பைடன், டிரம்ப்பின் ஆட்சியில் அமெரிக்கா தனது மதிப்புகளை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Donald Trump, Joe biden, US Election 2020

    அடுத்த செய்தி