அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. பாரம்பரியமாக நவம்பர் மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமையிலேயே தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி இன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். கொரோனா பரவலை கையாண்ட விதம் குறித்து டிரம்ப் மீது பரவலான விமர்சனங்கள் உள்ள நிலையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
கொரோனா பரவல், வேலையில்லாத் திண்டாட்டம் , இனப்பாகுபாடு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளின் அடிப்படையில் டிரம்ப் - பைடன் இருவருக்குமான போட்டி வலுவடைந்துள்ளது.
அமெரிக்காவில் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே வாக்களிக்க முடியுமென்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இதுவரை 9 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்காத பலரும் தாமாகவே முன்வந்து இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்குகள் பைடனுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான இரண்டாவது விவாத நிகழ்ச்சிக்குப் பின் அமெரிக்காவில் பலர் தங்கள் வாக்குகளை மாற்றக்கோரி விண்ணப்பித்தனர்.
முன்கூட்டியே வாக்களித்த ஒருவர், தேர்தல் நாளுக்குள் தான் அளித்த வாக்கை திரும்பப் பெற்று விட்டு மீண்டும் வாக்களிக்கும் வசதி அமெரிக்காவின் பல மாகாணங்களில் நடைமுறையில் உள்ளது. இதனால் Can i change my vote? என்று அதிக அளவில் அமெரிக்கர்கள் இணையத்தில் தேடியது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இரண்டாவது விவாதத்தில் டிரம்பின் நடவடிக்கைகள் பலரது வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படி மாறும் வாக்குகள் தன் பக்கம் வருமென்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 24 கோடி பேருக்கு வாக்குரிமை உள்ளது. கடந்த தேர்தலில் 13 கோடியே 60 லட்சம் பேர் வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த தேர்தலில் முன்கூட்டிய வாக்கு எனப்படும் அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை ஏற்கனவே 9 கோடியைத் தாண்டி விட்டது. இன்று குறைந்த பட்சம் 5 கோடி பேர் வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் வாக்களிப்பில் ஜோ பைடனுக்கு செல்வாக்கு அதிகரித்திருந்தாலும், எலெக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வுக்குழுவில் அதிகபட்ச வாக்குகளை அவர் பெறுவாரா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் ஹிலாரி கிளின்டன் மக்கள் செல்வாக்கை பெற்றிருந்த போதும், தேர்வுக்குழுவில் அதிக வாக்குகளைப் பெற்ற டிரம்ப் அதிபரானார். இதனால் தேர்வு முடிவு குறித்து உலக அளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும் படிக்க..
அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிபர் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு அமெரிக்காவைத் தாண்டியும் ஆவலுடன் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, US Election 2020