உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான பத்தாண்டுகளில் நாம் வாழ்ந்து வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் குறித்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் மனித குலம் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு ஸ்பெயினில் மேட்ரிட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகின்ற 13 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உலக வானிலை அமைப்பு, உலகளாவிய கால நிலை அறிக்கையை வெளியிட்டது. அதில், சர்வதேச வரலாற்றில் மிகவும் வெப்பமான பத்தாண்டுகளில் நாம் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1850 தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த உலகளாவிய சராசரி வெப்பநிலையைவிட 2019ஆம் ஆண்டின் வெப்பநிலை ஒன்று புள்ளி 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்றும் 2019 ஆண்டு உலக வரலாற்றில் இரண்டாவது அல்லது மூன்றாவது அதிக வெப்பமான ஆண்டாக அமையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அண்டார்டிகா மற்றும் க்ரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது என்றும் இதே போன்று இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற முக்கிய நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து பல பேராபத்துகளை உண்டாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பாக இருந்ததைவிட கடலில் அமிலத்தன்மை 26 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும். 2018-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 22 கோடி பேர் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதே காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டால், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளாவிய சராசரி வெப்ப நிலையானது 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிடும் என்றும், அப்படி நடந்தால் மீண்டும் சரிசெய்ய முடியாத பாதிப்புகளை மனிதகுலம் சந்திக்கும் என்றும் உலக வானிலை அமைப்பின் தலைவர் பெட்டேரி தாலஸ் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி எந்த நாடும் பாரிஸ் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டதன்படி கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் உலக அளவில் சராசரி வெப்பநிலை இன்னும் வேகமாக உயரக்கூடும்
சர்வதேச அளவில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வந்த நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளம், சூறாவளி, கடல் அரிப்பு, காட்டுத்தீ போன்ற பேரிடர்களின் பாதிப்பால் மீண்டும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2018-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 82 கோடி பேர் பசியால் வாடியுள்ளனர். உணவு பற்றாக்குறையால் பாதிப்படைந்த 33 நாடுகளில் 12 நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதற்கு காலநிலை மாற்றமே காரணம் என்றும் உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையே, கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி ஸ்பெயினில் தண்ணீரில் குதித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கலைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.