ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கை அரசியலில் சிக்கல்: விரைவில் தீர்வு காண ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸ் வலியுறுத்தல்

இலங்கை அரசியலில் சிக்கல்: விரைவில் தீர்வு காண ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸ் வலியுறுத்தல்

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை ஆதரிக்கப் போவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  இலங்கையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே-வை நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்தா ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்துள்ளார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமாறு 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம், சபாநாயகரிடம் வழங்கப்பட்டது.

  இந்நிலையில், ரணில் கூட்டணிக்கு ஆதரவாக உள்ள எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார். இதன்படி, ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி., வியாழேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின. இதனைத் தொடர்ந்து இன்று அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பதவியையும், லஞ்சத்தையும் கொடுத்து எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் ராஜபக்சேவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது, தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்றும், இந்த சூழலில் நடுநிலை வகிப்பது என்பது ஜனநாயக விரோத செயல் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  கொழும்புவில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி., சேனாதிராசா, நடுநிலை வகித்துவந்த தாங்கள், தற்போது ராஜபக்சேவுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

  இதுகுறித்து ராஜபக்ச அரசில் அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, ரணில் விக்கிரமசிங்கே அரசால் அதிக லாபம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள், அவரிடம் மீண்டும் பணம் பெற்று வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்பதாக குற்றம்சாட்டினார்.

  இதனிடையே அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இலங்கையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், விரைவில் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிசேனாவை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Mahinda Rajapakse, Maithripala Sirisena, Ranil Wickremesinghe, Sri Lanka political crisis, UN General Secretary Antonio Guterres