உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து ஐநா பொதுச்சபை கூட்டத்தில் மீண்டும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகிறது. ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது.
பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை குறி வைத்து தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோலில் 90 சதவிகித கட்டடங்கள் தாக்குதலில் உருக்குலைந்துள்ளன. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், குடி நீர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.
ஒரு மாதத்தை கடந்த ரஷ்யா- உக்ரைன் போர்: புதினின் தவறான முடிவால் ரஷ்யாவுக்கு பின்னடைவு
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் மனித உரிமை மீறல்கள் மோசமாக நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஐநா பொதுசபையில் உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் 140 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யா, சிரியா, எரித்ரியா, பெலாரஸ் ஆகிய நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கின.
இந்த நிலையில் வாக்கெடுப்பில் பங்கேற்காதது ஏன் என இந்தியா விளக்கமளித்துள்ளது. மனிதாபிமான உதவிகள்தான் உக்ரைனுக்கு தற்போது தேவைப்படுவதாகவும், இந்தியா எதிர்பார்த்த அம்சம் ஐநா வரைவு தீர்மானத்தில் இடம்பெறாததால் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாகவும், ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி T.S. திருமூர்த்தி கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.