உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக அந்நாட்டில் செயல்படும் மது ஆலைகள் பீர் தயாரிப்புக்கு பதிலாக பெட்ரோல் குண்டு தயாரிப்புக்கு மாறியுள்ளன.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ பலம் குறைந்த உக்ரைன் இந்த எதிர்ப்பை சமாளித்து, ரஷ்ய படைகள் முன்னேறுவதை தடுத்து நிறுத்த தொடங்கியுள்ளது. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பெலாரஸ் அரசு முயற்சி மேற்கொண்டது.
இதன் விளைவாக ரஷ்யாவும், உக்ரைனும் பெலாரசில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. ரஷ்ய தரப்பில் 4,300 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 200 ராணுவ வீரர்களை சிறை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
போர் காரணமாக பலரும் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ள சூழலில், வெளிநாடுகளில் வசிக்கும் ஒருசிலர் தங்கள் தாய்நாட்டிற்காக உக்ரைன் திரும்பி ராணுவத்தில் இணைந்து போரிட்டு வருகின்றனர். போதிய ஆயுதங்கள் இல்லாமல் தவித்துவரும் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவியை வழங்க முன் வந்துள்ளன.
இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனில் உள்ள மது ஆலைகள் பலவும் பீர் தயாரிப்புக்கு பதிலாக பெட்ரோல் குண்டு (Molotov Cocktails)தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. உக்ரைனின்
Lviv நகரில் செயல்படும் மது ஆலையான Pravda brewery பெட்ரோல் குண்டுகளை தயாரிக்க தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவுடனான போர்: உக்ரைன் ராணுவ வீரர்களின் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யாவின் பீரங்கி மற்றும் வான் வழி தாக்குதலுக்கு முன்பாக பெட்ரோல் குண்டு என்பது ஒன்றுமே இல்லை என்றாலும், யாராவது இதனை தயாரித்துதான் ஆக வேண்டும் என்று மது ஆலையின் உரிமையாளர் Yuriy Zastavny கூறுகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.