உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஒரு பக்கம் படைக்குவிப்பில் அந்நாடு ஈடுபட்ட போதிலும், இன்னொரு பக்கம் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. கடைசியாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினுடன் 105 நிமிடங்களாக போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் உக்ரைன் உடனான பிரச்னையை சுமுகமாக முடித்துக் கொள்வதற்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் நேற்றிலிருந்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கிறது. போர் என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் இன்னும் தொடுக்கப்படவில்லை. உக்ரைனில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் உலக நாடுகள், இந்த விவகாரத்தை கவனமாக கையாண்டு வருகின்றன.
இதையும் படிங்க -
உக்ரைனில் உள்ள தூதரகத்தைக் காலி செய்தது ரஷ்யா- உச்சக்கட்ட போர் பதற்றம் | Russia's war in Ukraine:
சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதால் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி மீட்பு பணியை மேற்கொள்ளலாமா என்ற ஆலோசனையில் மத்திய அரசு உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உயர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, உக்ரைன் மீதான அமெரிக்காவின் தாக்குதலான நியாயமற்றது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க -
War In Ukraine : உக்ரைனுடன் ரஷ்யா போர்- போலந்தில் அமெரிக்க படைகள் குவிப்பு
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்டவைகளை உறுப்பு நாடாக கொண்டுள்ள நேட்டோ அமைப்புடன் உக்ரைன் சேர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதனால், ரஷ்யாவை எதிர்த்து நேட்டோ நாடுகள் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.