ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாற்றப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. மேற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக அங்கு செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்காலிகமாக போலாந்து நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
உக்ரைனில் நிலையை சீரடைவதற்கு ஏற்ப தூதரகத்தை அங்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இரண்டு வாரத்திற்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. முதற்கட்டமாக உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது தலைநகருக்கு கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க -
ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை: சவுதி அரேபிய அரசு அதிரடி
இந்நிலையில் உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு, இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் தூதரகத்தை உக்ரைனில் இருந்து போலந்து நாட்டிற்கு மாற்றுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உக்ரைனில் சிக்கியுள்ள குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கடந்த மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியது. டோனஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களிடம் உதவி கேட்டதாக கூறி, ரஷ்யப் படைகள் உக்ரைன் படைகள் மீது முதற்கட்டமாக தாக்குதல் நடத்தின.
இதையும் படிங்க -
ரஷ்ய அதிபர் புடின் உடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம்: ஆனால் இங்கு தான் சந்திப்பு... இடத்தை அறிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
தற்போது ரஷ்யாவின் தாக்குதல் படிப்படியாக வளர்ந்து தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் நடந்து வருகிறது. இரண்டு வார காலமாக நடந்த சண்டையில் சுமார் 1500 பொதுமக்கள் தங்கள் தரப்பில் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வசிப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் எண்ணிக்கை சுமார் 15 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.