நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை அறிவித்துள்ளது. அந்நாடு சமாதான பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வந்தாலும், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மறுபக்கம் உக்ரைன் நாட்டிற்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளன. ஸ்வீடன் ராணுவ உதவிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், பிரான்சும் ராணுவ உதவியை அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவின் விடாப்பிடியைப் பார்க்கும்போது, இந்தப்போரில் இன்னும் சில வல்லரசு நாடுகளும் ஈடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தாக்குதல் ஆரம்பித்த நேற்று முன்தினத்தில் இருந்து தற்போது முதன்முறையாக, நவீன ரக ஏவுகனைகளை ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தரை மற்றும் கடற்பரப்பில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகனைகளை பயன்படுத்தி, உக்ரைன் ராணுவம் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடந்துள்ளது.
இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தை துவம்சம் செய்யத் தொடங்கிய ரஷ்யா... நவீன ஏவுகனைகள் மூலம் அதிரடி தாக்குதல்
இதில் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 800-க்கும் அதிகமான உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 சிறிய விமானப்படைத் தளங்கள், 19 எல்லை பாதுகாப்பு நிலைகள், எஸ் 300 ரகத்தை சேர்ந்த 24 ஏவுகணைகள், 48 ரேடார்கள், 7 இலகு ரக போர் விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள், 9 ஆளில்லா தாக்குதல் விமானங்கள், 87 டாங்க்குகள் மற்றும் 28 ராக்கெட் லாஞ்சர்கள் அடங்கும்.
ராணுவ தளவாடங்களை குறிவைத்துதான் தாக்குதல் நடத்துவதாகவும், பொதுமக்களை தாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது. இதனை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்டுத்தி ரத்து செய்து விட்டது. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்பட 15 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி-யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர், ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் எதிர்கொண்டு வருவது குறித்து எடுத்துரைத்ததாகவும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு அரசியல் ரீதியான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போதைய மோதலால், உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்கள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அமைதி முயற்சிகளுக்கு எந்த வழியிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், இந்தியர்களை விரைந்து வெளியேற்ற தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.