Home /News /international /

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஜோ பைடன் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஜோ பைடன் எச்சரிக்கை

Joe Biden

Joe Biden

ரஷ்யாவுடன் இருப்பதை விட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவிற்கு சீனா உதவி செய்தால், பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகிறது. ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது.

    பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை குறி வைத்து தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோலில் 90 சதவிகித கட்டடங்கள் தாக்குதலில் உருக்குலைந்துள்ளன. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், குடி நீர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ஜெர்மனியில் டெஸ்லா தொழிற்சாலை திறப்பு: உற்சாகத்தில் குத்தாட்டம் போட்ட எலான் மஸ்க்!


    இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் மனித உரிமை மீறல்கள் மோசமாக நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஐநா பொதுசபையில் உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 140 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யா, சிரியா, எரித்ரியா, பெலாரஸ் ஆகிய நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கின.

    இதனிடையே, பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “உக்ரைன் போரில் ரஷியாவுக்கு உதவினால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “ரஷியாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தினேன். ரஷ்யாவுடன் இருப்பதை விட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். அதனால் அவர் ரஷியாவுடன் பரஸ்பரம் செய்து கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி