இதை கேட்பதற்கு நம்ப முடியாத விஷயமாக இருக்கும். ஆனால், லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் 22 ஆண்டுகளாக சிப்ஸ், நொறுவைகள் மற்றும் சிக்கன் நக்கட்ஸ் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ஒருவித உணவு அழற்சி காரணமாக இந்த ஒரே பழக்கத்தை அவர் கடைப்பிடித்து வருகிறார்.
லண்டன் மாநகரின் கேம்ப்ரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் சம்மர் மான்ரோ. இவருக்கு தற்போது 25 வயது ஆகிறது. இவருக்கு 3 வயது இருக்கும்போது அவரது தாயார், மசித்த உருளைக் கிழங்கை மட்டுமே கட்டாயப்படுத்தி ஊட்டுவாராம். இதனால், ஒருவித உணவு அழற்சிக்கு ஆளான சம்மர் மான்ரோ, காய்கறிகளை முழுவதுமாக மறந்து விட்டார்.
தற்போது சிக்கன் நக்கட்ஸ், உருளைக் கிழங்கு சிப்ஸ் மற்றும் நொறுவைகள் ஆகியவற்றை மட்டுமே அவர் சாப்பிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் காலை உணவை சம்மர் மான்ரோ தவிர்த்து விடுகிறார். அதற்குப் பிறகு மதிய உணவாக, வாக்கர்ஸ் என்ற நொறுவை தீனியை ஒரு பாக்கெட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இரவு சாப்பாட்டுக்கு 6 அல்லது 8 சிக்கன் நக்கட்ஸ் சாப்பிடுவதுதான் இவரது வாடிக்கையாக இருக்கிறது.
பெட் கட்டினாலும் மசியவில்லை
பொதுவாக நம்மூரிலும் சிலர், சில வகை உணவுகளை கங்கனம் கட்டிக் கொண்டு வேண்டாம் என்று மறுப்பது உண்டு. ஆனால், நண்பர்கள் வேடிக்கையாக அவர்களை கிண்டல் செய்வார்கள். குறிப்பாக, இந்த உணவை சாப்பிட்டால், இவ்வளவு ரூபாயை நீ பெற்றுக் கொள்ளலாம் என பெட் கட்டுவார்கள். பெட் தொகை கூடுதலாக இருந்தால், அதற்காகவே அந்த உணவை நம்மில் பலர் சாப்பிட்டு விடுவோம்.
ALSO READ | பன்றியின் இருதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்: ‘புரட்சிகர’ அறுவை சிகிச்சையின் தோல்வி
ஆனால், விசித்திர குணம் படைத்த சம்மர் மான்ரோ, அதுபோன்று பெட் கட்டினாலும் கொள்கையை விட்டுக் கொடுப்பதில்லை. ஒரு பீஸ் காய்கறி அல்லது பழம் என்றாலும் அதை தூக்கி எறிந்து விடுவார் அவர். ஒருமுறை பட்டானி சாப்பிட்டால் 1000 யூரோக்கள் பரிசளிப்பதாக அவரது தாத்தா பெட் கட்டினாராம். ஆனால், எதற்கும் அசராத சம்மர் மான்ரோ, அதையும் மறுத்து விட்டார்.
எதுவா இருந்தாலும் மொறு, மொறுன்னு வேணும்
எப்போதாவது வேறு சில உணவுகளை சம்மர் மான்ரோ முயற்சி செய்தாலும், உடனடியாக உடல்நிலை சரியில்லாமல் போய்விடுமாம். இதுகுறித்து உணவு நல ஆலோசகர்கள் எவ்வளவோ கவுன்சிலிங் அளித்தும் பலனில்லை.
இதுகுறித்து சம்மர் மான்ரோ கூறுகையில், “எந்த உணவு என்றாலும் மொறு, மொறு வென்று கிரிஸ்பியாக இருக்க வேண்டும். நல்ல மெலிதான அளவில் இருக்கும் ப்ரைடு உணவுகள் மட்டுமே என்னால் சாப்பிட முடிகிறது. காய்கறி அல்லது பழம் எதையும் என்னால் சாப்பிட முடியாது’’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.