பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார். அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அழுத்தம் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தனது ராஜினாமா குறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், 'கட்சியில் திறமை என்பது அனைத்து மட்டத்திலும் சமமாக பரவியுள்ளது. தலைமை மாற்றம் தேவையில்லை என எனது சாகக்களிடம் கூறிப்பார்த்தேன். இருப்பினும் அவர்கள் உடன்படுவதாக இல்லை. எனவே, உலகின் சிறந்த வேலையை வருத்தத்துடன் நான் கைவிடுகிறேன்.
இத்தனை நாள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த சகாக்கள், அரசு ஊழியர்கள், குடும்பத்தினருக்கு நன்றி. எதிர்காலம் பொன்மயமானது' என அவர் கூறியுள்ளார். போரிஸ் ஜான்சன் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் கேர் ஸ்டார்மெர் கூறுகையில், 'இது நாட்டிற்கு மிகவும் நல்ல செய்தி. இது முன்னரே நிகழந்திருக்க வேண்டும். இவர் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர். பொய், புரட்டு, சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்' என காட்டமாக விமர்சித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் மீது கடந்த சில மாதங்களாகவே புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இரு மாதங்களுக்கு முன்னர் அந்நாட்டில் கோவிட் லாக்டவுன் அமலில் இருந்த போது சட்டத்தை மீறி போரிஸ் தனது அமைச்சர்களுடன் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விஷயம் வெளியே அம்பலமானதும் பெரும் புயலை கிளப்பிய நிலையில், போரிஸ் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. மேலும், இந்த புகாருக்குப் பின் போரிஸ் ஜான்சன் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தப்பித்தோம், பிழைத்தோம் என போரிஸ் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த வாரம் போரிஸ் கட்சியின் கொறடாவான கிரிஸ் பின்சர் என்பவர் மீது பாலியல் அத்துமீறல் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை போரிஸ் ஜான்சன் முறையாக கையாளவில்லை எனக் கூறப்பட்டது. அதன் எதிரொலியாகவே அரசின் மீது பெரும் அதிருப்தி எழும்பத் தொடங்கியது.
இதையும் படிங்க:
9வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்.. பெண் ஊழியருடன் சீக்ரெட் ரிலேஷன்ஷிப் அம்பலம்...
தற்போது 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் போரிஸ் அரசுக்கு எதிராக ராஜினாமா செய்துள்ள நிலையில், வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் போரிஸ் ஜான்சன். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கன்சர்வேடிவ் கட்சியின் முன்னணி தலைவர்களான லிஸ் டிரஸ், ரிஷி சுனாக், ஜெர்மி ஹன்ட், பென் வாலேஸ் உள்ளிட்டோர் பெயர்கள் பரிந்துரையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.