இஸ்லாமியர் என்பதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எம்.பி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. கொரோனா முழு முடக்கம் அமலில் இருந்த போது, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கேளிக்கை விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற விவகாரம் பூதாகரமாகியிருக்கும் நிலையில் பிரதமர் பதவி பறிபோகும் சூழலில் போரிஸ் ஜான்சன் ஊசலாடிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான விசாரணை அறிக்கை இந்த வாரத்தில் வெளியாகும் எனவும், விசாரணை முடிவில் போரிஸ் ஜான்சன் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர் பிரதமர் பதவியை இழக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் எம்.பி ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு போரிசுக்கு மேலும் ஒரு பிரச்சனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Also read: கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்
போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்தவர் நுஸ்ரத் கானி, இவர் கடந்த 2020ம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டர். தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே அமைச்சரவையில் இருந்து என்னை நீக்கியுள்ளனர் என்று நுஸ்ரத் பரபரப்பு குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார். போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நுஸ்ரத், நேற்று இது தொடர்பாக போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசியுள்ளார்.
இதையடுத்து நுஸ்ரத் இஸ்லாமியர் என்பதற்காக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்க குழு ஒன்றை போரிஸ் ஜான்சன் நியமித்திருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இது தொடர்பாக கட்சியில் முறைப்படி புகார் அளிக்குமாறு போரிஸ் ஜான்சன், நுஸ்ரத்திடம் கூறியதாகவும், ஆனால் இது அரசு சம்பந்தப்பட்டது, இந்த விவகாரத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அவர் தெளிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.
Also read: துரதிர்ஷ்டவசமாக பாஜகவை 25 வருடங்களாக வளர்த்துவிட்டோம் - உத்தவ் தாக்கரே
இது தொடர்பாக நுஸ்ரத் கூறுகையில், நான் கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தேன். ஆனால் நான் இஸ்லாமியராக இருப்பது அமைச்சரவை சகாக்களுக்கு அசெளகரியமாக இருப்பதாக எனக்கு கொறடாவால் சொல்லப்பட்டது என்றார்.
இதனிடையே அரசின் தலைமை கொறடாவான மார்க் ஸ்பென்சர், எம்.பி நுஸ்ரத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சி எந்தவிதமான இனவெறி அல்லது பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ளாது. இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, அவை அவதூறானவை என்று நான் கருதுகிறேன் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.