இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்ற ரூ.300 கோடி

இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்ற ரூ.300 கோடி
  • News18
  • Last Updated: October 3, 2019, 7:30 AM IST
  • Share this:
70 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தூதரிடம் ஹைதராபாத் மன்னர் வழங்கிய 300 கோடி ரூபாய் தொகை இந்தியாவுக்கு சொந்தமானது என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கடந்த 1947-ம் ஆண்டில் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையப் போவதில்லை என ஹைதராபாத் மாகாணத்தின் 7-வது மன்னரான மிர் உஸ்மான் அலி கான் அறிவித்தார்.

தங்களது மாகாணத்தை கைப்பற்ற முயற்சி நடைபெறும் என்ற அச்சத்தில், அப்போதைய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் நிதியை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிமின் லண்டன் வங்கிக்கணக்கில் சேர்த்தார்.


அதன் பின்பு நிலைமை சுமுகமான நிலையில் 9 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைக்குமாறு லண்டன் வங்கியை மிர் உஸ்மான் அலி கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது கணக்கில் பணம் இல்லாததால் பாகிஸ்தானின் ஒப்புதல் இன்றி பணத்தை திருப்பித் தர வங்கி மறுத்துவிட்டது. அதனால் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால், தங்கள் நாட்டு இறையாண்மையில் நீதிமன்றம் தலையிட முடியாது என பாகிஸ்தான் கூறியது.  2013-ம் ஆண்டில் பணத்திற்கு பாகிஸ்தான் அரசு உரிமை கொண்டாடியதால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஹைதராபாத்தின் 7-வது நிசாம் காலமான நிலையில், 8-வது நிசாமாக உள்ள அவரது பேரன் முகர்ரம் ஜா, அவரது இளம் சகோதரர் முஃபாகம் ஜா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போதைய நிலையில் லண்டன் நாட்வெஸ்ட் வங்கியில் 300 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த நிதி, நிசாமின் வாரிசுகளுக்கே சொந்தமானது என்று லண்டன் உயர்நிதிமன்ற நீதிபதி மார்கஸ் ஸ்மித் நேற்று தீர்ப்பளித்தார்.ஆயுதங்களை வழங்கியதற்காக இந்த நிதியைப் பெற்றதாக பாகிஸ்தான் கூறிய வாதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் ஹைதராபாத்தை சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டதாக பாகிஸ்தான் கூறிய வாதம் இந்த வழக்குக்கு பொருத்தமில்லாதது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Also watch

First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்