வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட UAE-ன் ஹோப் விண்கலம் - தலைமை தாங்கி வழிநடத்திய இளம் பெண் விஞ்ஞானி

செவ்வாய்க்கு செல்லும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட UAE-ன் ஹோப் விண்கலம் - தலைமை தாங்கி வழிநடத்திய இளம் பெண் விஞ்ஞானி
(படம்: Reuters)
  • Share this:
பூமியைத் தாண்டி குடியிருப்புகளை அமைக்கும் மனிதனின் கனவு செவ்வாய் கிரகத்தைக் குறி வைத்திருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே செவ்வாய் பயணத்தில் வெற்றியடைந்திருக்கின்றன.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் செவ்வாயை நோக்கித் தன் பயணத்தை துவக்கியிருக்கிறது. சாரா அல் அமீரி எனும் 33 வயது இளம் பெண் விஞ்ஞானி இந்தத் திட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

1.3 டன் எடையுள்ள இந்த விண்கலம் H2A என்னும் ஜப்பானிய ராக்கெட் மூலம் ஜப்பானிலுள்ள தனேகஷிமா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதியே திட்டமிடப்பட்ட இந்தப் பயணம் மோசமான வானிலையால் 5 நாட்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று விண்ணில் பாய்ந்துள்ளது ஹோப் விண்கலம்.


49 கோடியே 50 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து 7 மாதங்களுக்குப் பின் 2021 பிப்ரவரியில் இந்த விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டப்பாதையைச் சென்றடையும்.

Also read: கொரோனா அச்சுறுத்தலால் பாரிஸில் அறிமுகமான மிதக்கும் திரையரங்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயைச் சுற்றி வரும் வகையில் ஹோப் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை செவ்வாயில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் அந்த கிரகத்தின் மண்ணியல் தரவுகளை அளித்துள்ளன. ஆனால் ஹோப் விண்கலம் செவ்வாயின் காலநிலை குறித்த தரவுகளை மிகவும் துல்லியமாக அளிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இந்த மாதத்தில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களை முந்திக் கொண்டு விண்ணில் தடம் பதித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். 2117 ஆம் ஆண்டுக்குள் செவ்வாயில் மனித குடியேற்றத்தை சாத்தியமாக்கிக் காட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் அமீரகத்தின் விஞ்ஞானிகள் குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு. தன் ஐம்பதாவது பிறந்த நாள் பரிசாக ஹோப் விண்கலம் 2021ம் ஆண்டு செவ்வாயைத் தொடும் என எதிர்பார்க்கின்றது அரபு தேசம்.

 
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading