பாகிஸ்தானின் பெஷாவர் பிராந்தியத்தில் உள்ள சர்பந்த் பகுதியில் சீக்கியர்கள் இருவர் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவரின் பெயர் சல்ஜீத் சிங் மற்றொருவரின் பெயர் ரஞ்சித் சிங். இருவரும் அங்கு மளிகை பொருள் வியாபாரம் செய்து வருகின்றனர். இன்று காலை அவர்கள் கடைக்கு வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் சல்ஜீத் மற்றும் ரஞ்சித் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் அதிகளவில் சீக்கியர்கள் வசிதித்துவருகின்றனர். இங்கு இவர்கள் மருத்துவ பொருள்கள் உள்ளிட்ட பல்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மத சிறுபான்மையினரான சீக்கியர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அப்பகுதியின் முதலமைச்சர் மஹ்மூத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அங்கு மத ஒற்றுமையை சீர்குலைக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் பெஷாவரில் யுனானி மருத்துவரான ஹகீம் என்ற சீக்கியர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல், முன்னணி சீக்கிய தலைவரான சரண்ஜித் சிங் 2018ஆம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க:
வடகொரியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா, மூன்று நாளில் 8 லட்சம் பேருக்கு பாதிப்பு
அதேபோல், 2020ஆம் ஆண்டு டிவி தொகுப்பாளரான ரவீந்தர் சிங் என்பவரும், 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான சோரன் சிங் என்ற சீக்கியரும் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக முக்கியமான மதச் சிறுபான்மையினராக சீக்கியர்கள் உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.