ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. அதன் உச்சகட்டமாக தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் கணக்குகளை கடந்த வியாழக்கிழமை முடக்கினார் எலான் மஸ்க். அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டோணியோ குட்டரஸ் வரை அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கையை கைவிட்டார் எலான் மஸ்க்.
அந்த சூடு தணிவதற்குள் கொள்கை மாற்றம் செய்கிறேன் என்ற பெயரில் அடுத்த சிக்கிலில் சிக்கி தவித்து வருகிறார் எலான் மஸ்க்.
மற்ற சமூக வலைதளங்களின் பதிவுகளை ட்விட்டர் தளத்தில் விளம்பரப்படுத்தும் நோக்கில் மறு பதிவு செய்வதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதுபோன்று மீள் பதிவிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்கப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதோடு, தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்டு பயனர்களை கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தார். மேலும் பயனர்களின் முடிவிற்கு தான் கட்டுப்படுவதாகவும் கூறியிருந்தார் எலான் மஸ்க்.
அதன்படி ட்விட்டர் பயனர்களும் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்துள்ளனர். உலகம் முழுவதும் 35 கோடி பயனர்களை ட்விட்டர் கொண்டுள்ள நிலையில் எலான் மஸ்க்கின் கேள்விக்கு சுமார் ஒரு கோடியே 75 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
அதில் 57 விழுக்காடு பேர் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர். 43 விழுக்காடு பேர் வேண்டாம் என பதில் அளித்துள்ளனர். பயனர்களின் கருத்துக்கு தாம் மதிப்பளிப்பதாக எலான் மஸ்க் ஏற்கனவே பதிவிட்டிருந்தார்.
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
இந்நிலையில், பெரும்பாலான பயனர்கள் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என பதில் அளித்துள்ளனர். இதனால் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் நீடிப்பாரா? அல்லது தான் சொன்னபடி பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் எலான் மஸ்க். கொஞ்ச காலத்திற்கு முன்பு தான் எந்த தலைமை பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை என்று கூறியிருந்தார் எலான் மஸ்க்.
தற்போது பெரும்பாலான ட்விட்டர் பயனர்களும் எலான் மஸ்க் தலைமை பதவியில் இருக்க வேண்டாம் என ஆசைப்பட்டுள்ளனர். என்ன முடிவெடுக்கப் போகிறார் எலான் மஸ்க் என்பது தான் இப்போதைக்கு எழுந்துள்ள எதிர்பார்ப்பு.
பயனர்களின் கருத்தை ஏற்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவாரா? அல்லது வேறு ஏதேனும் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார எலான் மஸ்க் தெரியவில்லை.
செய்தியாளர் : ரோசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.