உலகை உலுக்கிய இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 20 வருடங்களுக்கு முன் நடந்தது என்ன?

இரட்டைக் கோபுரத் தாக்குதல்

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிகழ்ந்து இன்றோடு 20 ஆண்டுகளாகிறது. இந்த நூற்றாண்டின் மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக அறியப்படும் அந்நிகழ்வை சற்றே திரும்பிப் பார்க்கலாம்.

 • Share this:
  2001, செப்டம்பர் 11 இந்திய நேரப்படி இரவு 7.16 மணி, பரபரப்பான நியூயார்க் நகரம், கம்பீரமாக நிற்கும் உலக சுகாதார மையத்தின் 110 மாடிகளைக் கொண்ட இரு பெரும் கட்டடங்களில் ஒன்றில் விமானம் மோதுகிறது. அடுத்த 17-வது நிமிடத்தில் இன்னொரு விமானம் மற்றொரு கட்டடத்தில் மோத அதுவும் நொறுங்கி தீப்பற்றி எரிகிறது.

  மாடிகளில் சிக்கிக் கொண்டவர்கள் கூக்குரலிடுகின்றனர். எங்கும் மரண ஓலம். என்ன நடந்தது என தெரியும் முன்பே இரண்டு மணி நேரத்தில் இரு கட்டடங்களும் சரிந்து விழ சாம்பலும், தூசும் புயல் போல தெருக்களில் பாய்ந்தன.

  மூன்றாவது விமானம், வாஷிங்டன் டிசி அருகே அமெரிக்க ராணுவ தலைமையகத்தை தாக்க, நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விழுந்தது.

  4 விமானங்களையும் கடத்தி தாக்குதல் நடத்திய 19 பேர் உள்பட 2,977 பேர் இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் மாண்டனர். இதில் இரட்டைக் கோபுரத்தில் இறந்தவர்கள் மட்டும் 2,606 பேர். பல்லாயிரம் பேர் காயமடைந்தனர். கடும் புகையால் எராளமானோருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.

  21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உலகை அதிரவைத்த இந்த பயங்கரவாதத் தாக்குதலை அல்கய்தா நடத்தியது. பின்லேடன் தலைமையிலான இந்த இயக்கத்தைச் சேர்ந்த 19 பேர் 4 குழுக்களாக பிரிந்து 4 விமானங்களை கடத்தி இந்த கொடுஞ்செயலை செய்தனர். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, லெபனானைச் சேர்ந்த இவர்களில் ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர்.

  மிரண்டுபோன அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஒரு மாதத்திற்குள்ளாகவே ஆப்கானிஸ்தானுக்கு படையெடுத்தார். அங்கேதான் தாலிபான்களின் அரியணைக்கு கீழே அல்கய்தா இருந்தது. தாலிபான்கள் தப்பி ஓடினர். தாக்குதலை திட்டமிட்டதாக 2003ல் பாகிஸ்தானில் கைதான காலித் ஷேக் முகமது இன்னும் விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகள் இடைவிடாது தேடிய அமெரிக்கப் படை இறுதியில் 2011ல் பாகிஸ்தான் அருகே பின்லேடனைக் கொன்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்தாலும் இன்று வரை அமெரிக்காவால் அல்கய்தாவை முழுமையாக அழித்தொழிக்க முடியவில்லை. அந்த தோழ்வியுடனேயே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியிருக்கிறது. உலகின் வல்லரசாக அறியப்படும் அமெரிக்காவின் ஆறாத வடுவாகவே இன்றும் இருக்கிறது செப்டம்பர் 11 தாக்குதல்.
  Published by:Karthick S
  First published: