முகப்பு /செய்தி /உலகம் / துருக்கி, சிரியாவை சீர்குலைத்த நிலநடுக்கம்.. 4300ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

துருக்கி, சிரியாவை சீர்குலைத்த நிலநடுக்கம்.. 4300ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

Turkey Earthquake: நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4300-ஐ கடந்த நிலையில் இடிபாடுகளுக்குள் ஆயிரக் கணக்கானோர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேற்று அதிகாலை துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் ஆயிரக் கணக்கான மக்களை பலி வாங்கியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது துருக்கியில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழும் சிசிடிவ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதறவைத்துள்ளது. சாலைகளிலும், தெருவோரங்களிலும் மக்கள் பீதியோடு அமர்ந்திருப்பது காண்போரின் கண்களை குளமாக்குகின்றன.

ஏற்கனவே உள்நாட்டுப் போரால் மிக மோசமான சேதங்களை சந்திருக்கும் சிரியா நாட்டின் எல்லையில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகர் பகுதியில்  இருந்து 33 கிமீ தொலைவில், 18 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா நகரில் இருந்து 330 கிமீ தொலைவில் உள்ள துருக்கியின் தியர்பாகிர் நகர் வரையிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து  தரைமட்டமாகின. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபதாக உயிரிழந்தனர்.

மக்கள் பலரும் உயிர் தப்பிக்க வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில், தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. ஏற்கனவே போரில் குண்டு வீச்சால் விரிசலடைந்த, சேதமடைந்த கட்டிடங்கள் மொத்தமும் இடிந்ததால் பல பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால், துருக்கியில் 7 மாகாணங்களில் 1,498 பேர் இறந்தாக அந்நாட்டின் அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 5,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதே போல, சிரியாவில்  430  இறந்ததாகவும், 1000 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை துருக்கி சிரியாவில் 4300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கிளர்ச்சிப் படை  கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 390க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.

துருக்கியின் காஜியான்தெப் மற்றும் கஹ்ராமன்மராஸ் மாகாணங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. இங்கு 900 கட்டிடங்கள் இடிந்திருப்பதாக அந்நாட்டின் துணை அதிபர் ஒட்கே கூறி உள்ளார். துருக்கியிலும் சிரியாவிலும் தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டிடங்களும், மரண ஓலங்களுமாக காட்சி அளிக்கின்றன. இதற்கிடையே, அடுத்தடுத்து தொடர்ந்து நில அதிர்வுகளும், நிலநடுக்கங்களும் ஏற்பட்டு மக்களை மேலும் பீதிக்குள்ளாக்கி வருகின்றன. 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 50 முறை நில அதிர்வுகளும் பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. அதோடு உறையவைக்கும் குளிரும் நிலவி வருவதால் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரும், வீடுகள் இடிந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளோரும் சொல்லொண்ணா துயர்களை சந்தித்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் பீதியுடன் விரைந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, 20 ஆண்டுகளில் மிக மோசமான பேரிடரை சந்தித்துள்ள துருக்கிக்கு மீட்புப்பணிகளில் உதவ இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. ஏற்கனவே உள்நாட்டு போரால் சிரியாவில் பல இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களுக்கு இந்த நிலநடுக்கம் மேலும் துயரத்தை அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக 1939 ஆம் ஆண்டு இதே போல் துருக்கியில் 7.8 அளவிற்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 30ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். அது போன்ற துயரம் நிகழ்ந்து விடக்கூடாது என மக்கள் பீதியில் உறைந்துள்ளார்கள். நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்த கையோடு, முதல் கட்ட நிவாரண உதவிகளையும் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம், தேசிய பேரியடர் மீட்பு படையின் தேடுதல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர், மிக நுட்பமான மோப்ப நாய்கள், தேவையான மருந்துப் பொருட்கள், நவீன துளையிடும் கருவிகள் மற்றும் தேவையான கருவிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Earthquake, Syria