துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கடலில் உருவான நிலநடுக்கத்தால் சுனாமி - கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு 26-ஆக அதிகரிப்பு..

ஏஜியன் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்; 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கடலில் உருவான நிலநடுக்கத்தால் சுனாமி - கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு 26-ஆக அதிகரிப்பு..
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு..
  • Share this:
துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டின் சாமோஸ் தீவுக்கிடையே, ஏஜியன் கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் இஸ்மிர் மாகாணமும், கிரீஸின் சாமோஸ் தீவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. துருக்கியின் பேரக்லி (Bayrakli ) நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்ததாகவும், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் துருக்கி அறிவித்துள்ளது. துருக்கியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 16 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கிரீஸின் தலைநகர் ஏதென்ஸ், பல்கேரியா மற்றும் இஸ்தான்புல்லிலும் உணரப்பட்டன.கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்மிர் மாகாணத்தின் கடலோர நகரங்களில் எழுந்த பேரலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.


நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் பொதுமக்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி 805 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 364 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிலநடுக்கத்தால் கிரீஸ் நாட்டின் சாமோஸ் தீவையும் சுனாமி அலைகள் தாக்கின. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வழியில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாமோஸ் தீவில் நிலநடுக்கத்தின் பாதிப்பால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis) இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மிட்சோடாகிஸ், பின்னர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கருத்து வேற்றுமைகள் இருந்தபோதும், இதுபோன்ற தருணங்களில் நாம் இணைந்து நிற்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன், கிரீஸின் இழப்புகளுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading