முகப்பு /செய்தி /உலகம் / துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது

மனதை உருக்கும் புகைப்படம்

மனதை உருக்கும் புகைப்படம்

Turkey and Syria Earthquake | துருக்கியில் மட்டும் 18 ஆயிரத்து 342 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே சமயம் பிறந்து 10 நாளான குழந்தை முதல் ஏராளமான மழலைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

துருக்கி-சிரியா எல்லையில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் உருக்குலைந்த நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இரண்டு நாடுகளிலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

துருக்கியில் மட்டும் 18 ஆயிரத்து 342 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 6 மாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 56 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 500 வீரர்கள் 5-வது நாளாக 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 94 மணி நேரத்திற்குப் பிறகு, காசியான்டெப் நகரில் 17 வயது இளைஞர் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இளைஞரை தூக்கிக் கொண்டு மீட்பு படையினர் வெளியே வந்ததும், அங்கிருந்தவர்கள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர். மீட்கப்பட்ட இளைஞரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குடும்பத்தினர்.

மீட்பு படையினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். துருக்கியின் அந்தாக்யா நகரில் 90 மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 10 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். சிறுமி உயிருடன் இருப்பதை கண்டு பிடித்த வீரர்கள், சுமார் 32 மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.

இதேபோன்று கஹ்ரா மன் மராஸ் நகரில் 10 வயது சிறுவனை ராணுவ வீரர்கள் மீட்டனர். கட்டட குவியலுக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவன், பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஹட்டாய் மாகாணத்தில் 90 மணிநேரம் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருந்த, பிறந்து 10 நாளான பிஞ்சு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

இதனிடையே மீட்புப் பணியின் போது பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கடவுளின் சமிக்ஞை என பொருள்படும் அயா (Aya) பெயரிடப்பட்டுள்ளது. அக்குழந்தையின் பெற்றோர், உடன்பிறந்தோர் என அனைவரும் உயிரிழந்த நிலையில், கொள்ளுத்தாத்தா கவனிப்பில் உள்ளார்.

First published:

Tags: Syria, Turkey Earthquake