விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு: மத்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு - வெளியுறவு அமைச்சகம்

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு: மத்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு - வெளியுறவு அமைச்சகம்

ஜஸ்டின் ட்ரூடோ

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டம், கொரோனா பரவல் உள்ளிட்ட முக்கியத்துவம் கொண்ட விவகாரங்கள் தொடர்பாக பேசியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
விவசாயிகள் போராட்டத்தை கையாளும் விதத்திற்காக மத்திய அரசைகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டம் சமூக வலைத்தளங்கள் மூலமாக சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் எதிரொலியாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், பாப் இசைப்பாடகி ரிஹானா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என அந்த பிரபலங்களுக்கு சமூக வலைத்தளங்களில் சச்சின் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டம், கொரோனா பரவல் உள்ளிட்ட முக்கியத்துவம் கொண்ட விவகாரங்கள் தொடர்பாக பேசியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, விவசாயிகள் போராட்டத்தில் கலந்து அப்போராட்டத்தை திசைதிருப்பியதாக மத்திய அரசு சுட்டிக்காட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து கனடாவில் உள்ள இந்தியர்களையும், அமைச்சக ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் உறுதியளித்ததாக கூறினார்.

மேலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இருநாட்டு தலைவர்கள் பேசுகையில், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்திருப்பதாகவும் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இந்தியாவின் மிகப்பெரிய மருந்துத் திறனும், பிரதமர் மோடியின் தலைமையும் "தொற்றுநோயைக் கடக்க உலகிற்கு முக்கியமாக இருக்கும். என ஜஸ்டின் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் உரிமைக்காக போராடிவரும் விவசாயிகள் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வது கவலையளிப்பதாக இருப்பதாக இரண்டு முறை தெரிவித்தது மத்திய அரசை சினமூட்யது. இதற்காக கனடா தூதரை நேரில் அழைத்து தனது கண்டனத்தை இந்தியா பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்திய நிலையில் இதுவரை சுமூக முடிவு எட்டப்படாமல் உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்த அதே நேரத்தில் அடுத்த கட்ட போராட்டங்களையும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: