உலகின் நம்பர் 1 பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவான எலான் மஸ்க் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஒரு கருத்தரங்கு நிகழ்வில் காணொலி வாயிலாக பங்கேற்று எலான் மஸ்க் பேசினார். அப்போது அவரிடம் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி, அதை தடுக்க மக்கள் தொகை கட்டுப்பாடு மேற்கொள்வது சரி வருமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "சிலர் குறைந்த அளவில் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் சுற்றுச்சூழல் மேம்படும் என கருதுகின்றனர். இது முற்றிலும் முட்டாள்தனமானது. இப்போது இருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை விட இரு மடங்கு மக்கள் தொகை இருந்தால் கூட பூமியின் சுற்றுச்சூழல் நன்றாக வைத்துக்கொள்ளலாம்.
சொல்லப்போனால் தற்போது இருக்கும் மக்கள்தொகை எண்ணிக்கையாவது நாம் நிலைநிறுத்த வேண்டும். நமது இனத்தை பாதுகாக்க குழந்தைகளை பெற்றுக்கொள்வது அவசியம். நமது நாகரீகத்தை ஒன்றுமில்லாமல் போகும்படி நாம் விட முடியாது. இதற்கு ஜப்பான் சிறந்த உதாரணம் ஜப்பான் மக்கள் தொகை கடந்தாண்டு 6 லட்சம் சரிவை கண்டது. இதே நிலை நீடித்தால் ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போகும். பலரும் இந்த மோசமான உலகில் எனது குழந்தையை எப்படி கொண்டுவருவேன் என கூறுவதை நான் கேட்கிறேன். அவர்களுக்கு நான் கூற விரும்புவது வரலாற்றை புரட்டிப்பாருங்கள். இதற்கு முந்தைய காலம் தான் மோசமானது. தற்போது தான் நாம் மேம்பட்ட சூழலில் வாழ்கிறோம்" என்றார்.
அண்மைக் காலமாக பரபரப்பான செயல்களில் ஈடுபட்டு ரெகுலர் நியூஸ் கன்டென்டாக மாறி வரும் எலான் மஸ்க்குக்கு இதுவரை 8 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது அவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளன.
இதையும் படிங்க:
நடு வானில் பிறந்த குழந்தைக்கு விசித்திரமான பெயர் சூட்டிய பெற்றோர்
புவி வெப்பமயம் காரணமாக பூமி வாழ்வதற்கு தகுதியில்லா சூழலில் உள்ளது என விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில், மனிதர்களை வேறு கிரகத்திற்கு குடியேற்றும் கனவு திட்டத்தை எலான் மஸ்க் நீண்ட நாள்களாக மேற்கொண்டுவருகிறார். இதற்கிடையில் பிரபல சமூக வளைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கி அந்த டீலை கிடப்பில் போட்டுள்ளார் எலான் மஸ்க்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.