Home /News /international /

தாலிபான்களின் நண்பர்களான ஹக்கானி தீவிரவாதிகள் - இந்த கொலைகார அமைப்பின் பின்னணி என்ன?

தாலிபான்களின் நண்பர்களான ஹக்கானி தீவிரவாதிகள் - இந்த கொலைகார அமைப்பின் பின்னணி என்ன?

Haqqani network

Haqqani network

தாலிபான்களின் போர் வீரியத்தை அதிகப்படுத்தியதில் ஹக்கானிகளின் பங்கு இருந்ததாகவும், தாலிபான்களுக்கும் அல்கொய்தா அமைப்பினருக்கும் முதன்மை தொடர்பாக ஹக்கானி அமைப்பினர் விளங்கியதாகவும் ஐநா அமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டது.

தாலிபான்கள் தலைமையிலான ஆப்கனின் புதிய ஆட்சியில், சமீபகால தாக்குதல்களின் மூலம் அப்பாவி ஆப்கானிஸ்தானியர்கள் பலரை காவு வாங்கிய ஹக்கானி அமைப்பினரையும் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாகவும் இந்த அரசின் அவர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் ஆப்கன் அரசுப் படைகளை வீழ்த்திய பின்னர் தாலிபான் தலைவர்கள் பலரும் காபுலில் புதிய ஆட்சி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் ஹக்கானி அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த ஹக்கானி அமைப்பினர் ஆப்கானிஸ்தானியர்கள் அஞ்சும் ஒரு கொலைகார தீவிரவாத அமைப்பாக விளங்குகிறார்கள்.

யார் இந்த ஹக்கானிகள்?

சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தான் இருந்த சமயம் 1980களில் ஜலாலுதீன் ஹக்கானி இந்த நிழல் உலக அமைப்பை தொடங்கினார். இவர் சோவியத் எதிர்ப்பு ஹீரோவாக கருதப்பட்டார், அவருடைய அமைப்பும் கிழக்கு ஆப்கன் பகுதியில் அசுர வளர்ச்சியை கண்டது. இவருக்கு அமெரிக்காவின் ஆதரவும் இருந்தது, முஜாகிதீன்களுக்கு பண மற்றும் ஆயுத உதவியை ஹக்கானிகள் வாயிலாக பாகிஸ்தான் அளித்தது. சோவியத் பின்வாங்கிய பின்னர், ஒசாமா பின் லேடன் உள்ளிட்ட அயல்நாட்டு தீவிரவாதிகளிடம் இவர் நட்பு பாராட்டினார்.

Haqqani network


1996ல் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய போது அவர்களுக்கு ஆதரவு தந்தார் ஹக்கானி. அப்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சியில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

Also read: தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தல்?

2018ல் ஹக்கானி உடல்நலக்கோளாறால் மறைந்த போது அவருடைய மகன் சிராஜுதீன் அந்த அமைப்பின் தலைவரானார். பாகிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் இந்த அமைப்புக்கு ஏராளமான முகாம்கள் உள்ளன. 2015-ல் சிராஜுதீனை தாலிபான்கள் தங்களின் துணைத் தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்தினர்.

ஹக்கானிகள் ஏன் ஆபத்தானவர்கள்?

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சில கொலைகார தாக்குதல்களை ஹக்கானி அமைப்பினர் நடத்தியிருக்கின்றனர். தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளால் ஹக்கானி அமைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு தூதரகங்கள், அவர்கள் தொடர்புடைய முக்கிய இடங்களை தற்கொலைப்படை தாக்குதல்கள் மூலம் குறிவைத்து தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

Haqqani network


2013ம் ஆண்டு ஹக்கானிகளின் ட்ரக் ஒன்றை ஆப்கன் அரசுப்படைகள் சோதனை செய்த போது அதில் 28 டன் அளவுக்கு வெடிமருந்து இருந்தது.

2008ல் அப்போதைய அதிபர் ஹமீது கர்சாய் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவாக ஹக்கானிகள் செயல்பட்டு வருவதாக அமெரிக்க உயர் ராணுவ அதிகாரி ஒருவர் 2011ல் தெரிவித்திருந்தார், எனினும் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் வழக்கம் போல மறுத்தது.

Also read: தாலிபான்களின் கொட்டத்தை அடக்கிய எதிர்ப்புப் படைகள் – 3 மாவட்டங்கள் மீண்டும் மீட்பு!

தாலிபான்களின் போர் வீரியத்தை அதிகப்படுத்தியதில் ஹக்கானிகளின் பங்கு இருந்ததாகவும், தாலிபான்களுக்கும் அல்கொய்தா அமைப்பினருக்கும் முதன்மை தொடர்பாக ஹக்கானி அமைப்பினர் விளங்கியதாகவும் ஐநா அமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டது.

தாலிபான் அரசில் ஹக்கானிகளின் முக்கியத்துவம் என்ன?

சிராஜுதீனின் சகோதரர் அனஸ், ஆப்கன் அரசுப் படையினரின் பிடியில் இருந்த போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கப் படையினரிடம் பேச்சுவார்த்தையின் மூலம் அனஸ் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பின்னரே அமெரிக்க படைகளுடன் தாலிபான்களுக்கு நட்புறவு ஏற்பட்டு படை பின்வாங்கலுக்கு காரணமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சிராஜுதீன் மற்றும் அவரது மாமா கலீல் ஹக்கானி ஆகியோர் அமெரிக்காவின் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்களின் தலைக்கு மில்லியன் டாலர்கள் பரிசும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபான்கள் தலைமையிலான புதிய அரசு அமைப்பது தொடர்பாக அனஸ் ஹக்கானி மற்றும் கலீல் ஹக்கானி ஆகியோர் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஹக்கானி அமைப்பினருக்கு தாலிபான் அரசில் முக்கிய பங்கு கிடைக்கப்போவது உறுதியாகி உள்ளது.

தற்போது காபுல் நகருக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை ஹக்கானி அமைப்பினரிடம் தான் தாலிபான்கள் வழங்கியிருக்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban, Terrorists

அடுத்த செய்தி