Home /News /international /

அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம்

அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம்

america

america

Interational News | அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம் உலகையே உலுக்கியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்தின் பின்னணி என்ன? என்பதை இந்த சிறப்புத் தொகுப்பில் காணலாம்....

  துப்பாக்கி என்றதுமே நமது நினைவுக்கு வருவது ஹாலிவுட் சினிமாக்கள் தான். துப்பாக்கியால் எதிரிகளை வேட்டையாடும் கதாபாத்திரங்களை ஹாலிவுட் திரைப்படங்களே நமக்கு கண்முன் கொண்டு வந்தன.

  இன்று இந்த துப்பாக்கிகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

  கடந்த மே மாதத்தில் மட்டும் டெக்சாஸ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம், நியூயார்க்கில் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சம்பவம், கலிஃபோர்னியா மாகாணத்தில் தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம், டெக்ஸாசில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு என 4 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதற்கு அமெரிக்காவில் துப்பாக்கி வியாபாரம் செழித்து வளர்வதே காரணம் ஆகும். ஆடைகளைப் போல ஆயுதங்களையும் அமெரிக்காவில் உள்ள கடைகளிலும், ஆன்லைன் மூலமாகவும் எளிதாக வாங்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

  அமெரிக்காவுக்கும் துப்பாக்கிக்குமான தொடர்பு என்பது, அதன் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது. 1775-ல் பிரிட்டீஷ் காலனி ஆட்சிக்கு எதிரான புரட்சிகர போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பிறகு அந்நாட்டில் காவல் நிலையங்களே இல்லாத நிலை இருந்தது. அன்றைய காலகட்டங்களில் உணவுக்காக வேட்டையாடுதல் தொடங்கி நாட்டை பாதுகாப்பது வரை குடிமக்களின் ஒரு அங்கமாகவே துப்பாக்கி இருந்தது.

  அதைத் தொடர்ந்து, 1791-ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் குடிமக்களுக்கு ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.

  அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாகாணங்களைக் கட்டுப்படுத்த 1861-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அந்தக் காலம் தொட்டே அமெரிக்கர்களுக்கு வரலாற்றுப் பெருமையாகவும், குடும்ப கவுரவமாகவும் துப்பாக்கி இருந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் வெள்ளையின மக்களில் 48% பேர் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். தற்காப்புக்காக என்றே அமெரிக்கர்கள் பிரதானமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி வந்தனர். இனவெறி தலைதூக்கிய பிறகு துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்துவிட்டன.

  கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். 2020 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு காரணமாக மட்டும் 45,222 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளிலேயே துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனி நபரின் எண்ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம். ஒவ்வொரு 100 குடும்பங்களிலும் 121 துப்பாக்கிகள் இருக்கின்றன.

  18 வயதுக்கு மேற்பட்டவர்களும் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இளம் வயதினர் மத்தியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி கலாச்சாரத்தால் 4,000 சிறார்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இது கடந்த ஆண்டு 5,692 பேராக அதிகரித்துள்ளது. அதில் 1,560 சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.

  அமெரிக்க மக்கள்தொகையில் பாதி பேர் துப்பாக்கி வன்முறையை பெரும் பிரச்சினையென கருதுகின்றனர். துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று ஆளும் ஜனநாயக கட்சியினர் 91 சதவீதம் பேரும், குடியரசு கட்சியினர் 24 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருணம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

  Read More : 100 நாள்கள் கடந்தும் ஓயாத போர் - உக்ரைனின் 20% இடத்தை கைப்பற்றிய ரஷ்யா

  இன்னும் எத்தனை படுகொலைகளை ஏற்க நாம் தயாராக இருக்கிறோம் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ள அவர், துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை, 18-லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேபோன்று தனது ஆட்சிக்காலத்திலும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக முன்னாள் அதிபர் ஒபாமாவும் தெரிவித்திருந்தார். அமெரிக்கா மனித உரிமைகள் பற்றி உலகிற்கு பாடம் எடுக்கும் நிலையில், அதை தனது சொந்த நாட்டில் அமல்படுத்த முடியாமல் திணறி வருவது கண்கூடாக தெரிகிறது.

   
  Published by:Elakiya J
  First published:

  Tags: America

  அடுத்த செய்தி