வளர்ந்து வரும் உலகில் லெஸ்பியன், ஓரினசேர்க்கை, இரு பால் ஈர்ப்பு மற்றும் திருநங்கை (LGBT) சமூக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக பெரிதும் போராடி அதை அடைந்தும் வருகின்றனர். அரசாங்கங்களும் அவர்களுக்கான மரியாதையையும் , சட்டபூர்வமாக அங்கீகரித்து வருகின்றது.
ஆசியாவில் தைவான் முதன் முதலாக மே 2019 இல் ஒரே பாலினத் தம்பதிகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளித்தது. ஒரே பாலினத் தம்பதிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த ஆசியாவின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக இப்போது தாய்லாந்து ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
தாய்லாந்து ஆசியாவின் மிகவும் அதிக அளவில் லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபால் ஈர்ப்பு மற்றும் திருநங்கை (LGBT) சமூகங்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த இடமாக உள்ளது. சகிப்புத்தன்மை மற்றும் மக்களை தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது.
ஆனால் தாய்லாந்து சட்டங்களும் நிறுவனங்களும் மாறிவரும் சமூக மனப்பான்மையை இன்னும் பிரதிபலிக்கவில்லை. LGBT மக்கள் மற்றும் ஒரே பாலின தம்பதிகளுக்கு எதிராக இன்னும் பாகுபாடு காட்டுவதாகவும் ஆர்வலர்கள் கூறி வந்தனர். சென்ற ஆண்டு சட்டமன்றத் கூட்டத்தில் இந்த சமூகத்தில் வாழும் மற்றவர்களைப் போலவே இவர்களும் நடத்தப்பட வேண்டும். இவர்களுக்கான உரிமையும், சுதந்திரமும் , மதிப்பும் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று நான்கு சட்ட வரைவுகள் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரே பாலினப் இணையர்களுக்கும், பல பாலினத் தம்பதிகளுக்கு இருக்கும் அதே சட்ட உரிமைகளை வழங்க ஒரு முயற்சியாய் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆசியாவிலேயே முதல் முறை... கஞ்சாவை பயன்படுத்த அனுமதி வழங்கிய தாய்லாந்து!
ஆளும் கட்சி 2 சட்டங்களையும், எதிர்க்கட்சி 2 சட்டங்களையும் முன்வைத்தது. அணைத்து சட்டங்களும் சட்டசபையால் முதல் வாசிப்பில் ஏற்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருக்கும் திருமண சட்டங்களை போல் இதுவும் செயல்படும். இவர்களின் திருமணங்களுக்கான வரையறைகளையும், வழிமுறைகளையும் தீர்மானிக்க 25 பேர் கொண்ட சிறப்பு குழு அமைத்துள்ளோம். அவற்றை நடைமுறைக்கு விரைவில் கொண்டு வருவோம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசின் பெருமைமிகு ராஜஉலா நிகழ்வின் போது எண்ணிலடங்கா மக்கள் வானவில் வண்ணக்கொடியசைத்து LGBT சமூகத்திற்காக குரல் கொடுத்து வலம் வந்த நிகழ்வு நடந்த ஒரு வாரத்தில் சட்ட மன்றத்தின் இந்த முயற்சி குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.