ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கார்டே பர்வான் என்ற இடத்தில் சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாரா உள்ளது. இந்த குருத்வாராவில் இன்று காலை பயங்கரவாதிகள் உள்ளே புகுந்து வெடிகுண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் சீக்கிய வழிபாட்டுத் தலம் பெரும் சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் குருத்வாராவின் பாதுகாவலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து அங்கு விரைந்த தாலிபான் அரசின் காவல்துறையினர் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தி அப்பகுதிக்கு பாதுகாப்பு அளித்தனர்.
இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காலை பிரார்த்தனையின் போது சுமார் 30 பேர் குருத்வாராவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதல் சத்தம் கேட்டு 15 பேர் தப்பியதாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ளவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், கார்தே பர்வான் குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. அங்குள்ள பாதுகாப்பு நிலவரங்களை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். சீக்கிய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நலனில் தான் எங்கள் பிரதான அக்கறை உள்ளது என்றார்.
பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் தனது ட்விட்டர் பதிவில், காபூலில் சீக்கிய வழிபாட்டினரை குறிவைத்து நடைபெற்ற தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. அனைவரின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். காபூலில் வசிக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறையை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க:
வட கொரியாவில் பரவும் புதிய தொற்று! அச்சத்தில் அந்நாட்டு மக்கள்
ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினராக வாழும் சீக்கியர்கள் மீது இது போன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. அங்குள்ள பல்வேறு பிராந்தியங்களில் வசிக்கும் சீக்கியர்கள் குறிவைத்து கொல்லப்படுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.