கடந்த முறை ஆட்சியைவிட தற்போது பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்கும் தாலிபான்கள் - காரணம் என்ன?

தாலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானை கடந்தமுறை ஆட்சி செய்யும்போது பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை விட தற்போது கூடுதல் உரிமைகளை தாலிபான்கள் வழங்குகின்றன.

  • Share this:
    மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஆஃப்கன் மக்களுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தாலிபான்களின் ஆட்சியால் ஆஃப்கானிஸ்தானில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

    ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு இயங்கி வரும் டோலோ நியூஸ் என்னும் தொலைக்காட்சியில் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் மௌலவி அப்துஹக் உடன் பெஹெஸ்டா என்னும் பெண் செய்தியாளர் நடத்திய நேர்காணல் உலகின் புருவங்களை உயரச் செய்துள்ளது.

    அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபான்கள், அங்கு கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தினர். பெண்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, பெண்களுக்கான பள்ளிகள் மூடப்பட்டன. பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது தாலிபான்களின் அத்தகைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்று கூறியுள்ள தாலிபான் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினரான ஏனாமுல்லா சமங்கனி, ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட், இனிமேலும் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பெண்கள் படிப்பதற்கும், பணி புரிவதற்குமான சூழலை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    அரசுப்பணிகளில் பெண்கள் இடம்பெற அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இஸ்லாமிய சட்டப்படி அரசு கட்டமைப்புகளில் பெண்களின் பங்கு இருக்கும் என்று சமங்கனி கூறியுள்ளார்.

    1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் முழு உடலையும் மறைக்கும்படியான புர்காவை மட்டுமே பெண்கள் அணிய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிலும் விதிவிலக்கு அளித்துள்ள தாலிபான்கள் பெண்கள் புர்கா அணிய கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், எனினும் தலை மற்றும் முகத்தை மறைப்பதற்கான ஹிஜாப்பை கட்டாயம் அணியவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

    ஆண் துணையின்றி பெண்கள் வெளியே வருவதற்கு கடந்த காலங்களில் அனுமதி இல்லை. தற்போது அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

    முந்தைய தாலிபான் ஆட்சியில் இசை, திரைப்படம், தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கலாம் என்றும், ஆனால் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் தாலிபான் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த 20 ஆண்டு காலங்களில் சற்றே சுதந்திரக் காற்றை சுவாசித்து வந்த ஆஃப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் தாலிபான்கள் தலை தூக்கியுள்ளதால் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். அதனால் மக்களின் அச்சத்தைப் போக்குவதே தங்களது முதல்பணி என கூறியிருக்கின்றனர் தாலிபான்கள். தாலிபான்கள் அளித்துள்ள உறுதிமொழிகள் காப்பாற்றப்படுமா என்பதை சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    Published by:Karthick S
    First published: